4 பேருடன் திருமணம் - பலே பெண் கைது..!

4 பேருடன் திருமணம் - பலே பெண் கைது..!

சென்னை:

வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய இளம்பெண், இதுவரை 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்தது தெரிந்தது. உடந்தையாக இருந்த 2-வது கணவரும் கைதானார்.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அப்போது தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு மாவு பொருட்கள் வினியோகம் செய்யும்போது அங்கு வேலை செய்து வந்த அபிநயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு கணவன் – மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் புதிய பட்டுப்புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் அபிநயா, சமூகவலைதளங்களில் பல்வேறு பெயர்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதை சைபர் கிரைம் போலீசார் மூலமாக கண்டுபிடித்தனர். அதை வைத்து நடத்திய விசாரணையில் அபிநயா தற்போது சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அபிநயா மதுரைக்கு சென்றிருப்பது தெரிந்தது. இதற்கிடையில் நேற்று மீண்டும் விடுதிக்கு திரும்பி வந்த அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுரை அரிசிக்கார தெருவைச் சேர்ந்த அபிநயா, 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அபிநயாவுக்கு 2011ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் தன்னைவிட வயது மூத்தவர் எனக்கூறி அவருடன் தகராறு செய்த அபிநயா, ஒரு ஆண்டுக்குள் அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு சிவகங்கை பகுதியில் நகை கடையில் வேலை பார்த்தபோது, 2013ஆம் ஆண்டு அதே கடையில் தன்னுடன் வேலை பார்த்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்தார். அவர் மூலம் அபிநயாவுக்கு 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 4 மாதங்களில் குழந்தை மற்றும் கணவரை பரிதவிக்க விட்டு விட்டு அபிநயா மாயமானார். இது தொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் விசாரணை நடத்திய போது, மதுரையில் அவருடன் கம்ப்யூட்டர் வகுப்பு பயின்ற பிரபு என்பவருடன் ஒருவாரம் உல்லாச பயணமாக கேரளா சென்றது தெரியவந்தது. போலீசார் 10 நாட்களில் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர்.

பின்னர் குடும்பத்துடன் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து வசித்து வந்தனர். அங்கு பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் அபிநயாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் மதுரை திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி 2-வது முறையாகவும் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்கு பிறகு 2020ஆம் ஆண்டு மீண்டும் அபிநயா மாயமானார். இந்த முறை செந்தில்குமார் போலீசில் புகார் செய்யவில்லை.

இதையடுத்து அபிநயா, சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து 10 நாட்கள் மட்டுமே அவருடன் இருந்தார். மீண்டும் அவரையும் ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமானார். ஆட்டோ டிரைவர் பல இடங்களில் தேடிய போதுதான் தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் அபிநயா வேலை செய்வதை கண்டுபிடித்தார். ஆனால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அவருடன் செல்ல அபிநயா மறுத்துவிட்டார்.

அப்போதுதான் அந்த பேக்கரிக்கு கோதுமை மாவு வினியோகம் செய்ய வந்த நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பதுபோல் நடித்து அவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டதும், பின்னர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. நடராஜன் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பி ஓடிய அபிநயா, திருச்சியை சேர்ந்த அமீர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் 10 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பிறகு அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் அபிநயா நகை, பணத்துடன் மாயமான செய்திகள் டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது.

இதை பார்த்த அவரது 2-வது கணவர் செந்தில்குமார், அபிநயாவை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பிறகு மீண்டும் 2-வது கணவருடன் சென்ற அபிநயா, அவர் மூலமாக அந்த நகையை விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தார். மீண்டும் அடுத்தகட்ட மோசடிக்கு தயாராக வேண்டி செம்மஞ்சேரி பகுதியில் பெண்கள் விடுதியில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்தபோதுதான் போலீசில் சிக்கிக்கொண்டார்.

4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த அபிநயா, மேலும் பலருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். அவரிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும், ஆனால் தற்போது நடராஜன் மட்டும் புகார் செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks