"ஹஜ் யாத்திரை மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்" -எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

"ஹஜ் யாத்திரை மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்" -எடப்பாடி பழனிசாமி
வலியுறுத்தல்..!

சென்னை,

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த மானியம் 2018-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இஸ்லாமிய சமூகத்தினைச் சேர்ந்த பெரியவர்கள், ஜமாத்தார்கள், ஹஜ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் என்னை நேரில் சந்தித்து தொடர்ந்து ஹஜ் யாத்ரிகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 2018-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு 6 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3,769 இஸ்லாமியர்களுக்கு தலா 15,913 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 4,379 ஹஜ் யாத்ரிகர்களுக்கு தலா 13,639 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

பிறகு 2021-ம் ஆண்டு இஸ்லாமிய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 16.2.2021 அன்று அதிமுக அரசு ஹஜ் மானியத்தை 6 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிட்டது.ஆனால், எதிர்பாராதவிதமாக 2021-ம் ஆண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பின் காரணமாக சவுதி அரேபியா அரசு ஹஜ் யாத்திரைக்கு தடை விதித்தது. 2022-ம் ஆண்டு, தமிழகத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை சவுதி அரேபியா ஹஜ் யாத்ரிகர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதால், தமிழகத்திற்கு 2019-ம் ஆண்டை ஒப்பீடு செய்யும்போது, சுமார் 40 சதவீதம் அதாவது சுமார் 1,750 நபர்களுக்கு மட்டுமே புனிதப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதுவே கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மத்திய அரசிடம் போராடி தங்கள் மாநிலங்களிலிருந்து ஹஜ் யாத்திரை செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை 50 முதல் 60 சதவீதம் வரை தக்கவைத்துள்ளது. இந்த திமுக அரசு எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை.

இதுபோலவே, தமிழக யாத்ரிகர்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்துதான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியவுடன், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி விமான நிலையங்களிலிருந்து புறப்பட அனுமதி பெறவில்லை. மேலும் அதிமு அரசு அறிவித்த ரூ.10 கோடி ஹஜ் மானியம் மற்றும் கொச்சி விமான நிலையத்தில் தங்குவதற்கும், உணவுக்கும் வழங்குவதாக இந்த அரசு அறிவித்த ரூ.1,500 க்கான (ஒவ்வொரு பயணிக்கும்) கூடுதல் தொகை ஆகியவற்றிற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை.எப்போதும் சிறுபான்மையினரின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் இதுபோன்ற பல்வேறு ஏமாற்றங்களை தமிழக இஸ்லாமியப் பெருமக்களுக்கு அளித்துள்ளது. ஆனால், உண்மையிலேயே சிறுபான்மையினரின் உண்மையான நலம் விரும்பியாக, பாதுகாவலனாக விளங்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசும் அவ்வாறே செயல்பட்டு வந்தது.

இந்தியாவிலேயே வருடந்தோறும் சொந்த நிதியில் ரமலான் இறை வணக்கம் மற்றும் நோன்பு திறப்பு விருந்து அளித்த ஒரே கட்சி அதிமுக.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தொண்டர்களாகிய நாங்களும் இதனை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இப்படி நாங்கள் செய்த பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையான மதச்சார்பற்ற இயக்கமாக, சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக எப்போதும் திகழ்ந்து வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 கோடி ஹஜ் மானியத்தையும், கொச்சி வழியாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.1,500-ம் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், ஹஜ் பயணிகள் எண்ணிக்கையையும், சென்னை விமான நிலையம் வழியாக அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks