தூத்துக்குடி:
அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகத்தால் திருமணமான மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார் கணவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் பால தண்டாயுத நகர். இப்பகுதியைச் சேர்ந்த சண்முகம் -மாரியம்மாள் தம்பதியினரின் மகள் மாரிச்செல்வி. 19 வயதான இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதான பொன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்திருக்கிறது.
திருமணமான நாளிலிருந்து மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒரு நாள் இந்த பிரச்சினையில் மாரிச்செல்வியை அவரின் தாயார் வீட்டிலேயே கொண்டு போய் பொன்ராஜ் விட்டுவிட்டு வந்திருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் மாமியார் மாரியம்மாள், மருமகன் பொன்ராஜுக்கு போன் செய்து, மகளை அழைத்து போகுமாறு சொல்லியிருக்கிறார். அவளுடன் வாழ பிடிக்கவில்லை. அதனால் உங்கள் மகளை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் தடித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நண்பர்கள் இரண்டு பேருடன் மாமியார் வீட்டிற்குச் சென்று இருக்கிறார் பொன்ராஜ். அங்கே தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டித் தள்ளி இருக்கிறார். தடுக்க வந்த மாமியாரையும் வெட்டுவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார் பொன்ராஜ். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் மாரிச்செல்வி. படுகாயம் அடைந்த மாமியாருக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, தப்பி ஓடிய பொன்ராஜை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.