பண மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புதிதாக 7 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாக கூறப்படும் பகுதிகளில் இத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்களை போலீஸார் சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடலோரக் கண்காணிப்பினையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி முதல் வேதாரண்யம் வரையில் அனைத்து மீனவ கிராமப் பகுதிகளிலும் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் இந்தியா, இலங்கை ஆகிய இரண்டு நாட்டுக் கடல் எல்லைகளில் கண்காணிப்பை அதிகரிக்க ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசியைச் சேர்ந்த குணா தூயமணி என்பவர் அவரின் மகனுக்கு ராஜேந்திரபாலாஜி மூலமாக ஏ.பி.ஆர்.ஓ வேலை வாங்கித் தரச்சொல்லி முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி விஜயநல்லதம்பி, அவரின் மனைவி மாலதி, அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமுதேவன்பட்டி ஆகியோரிடம் ரூ.17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளாராம்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த நாதன், தன் மகனுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தர சிவகாசி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திரபாலஜியிடம் ரூ. 7 லட்சம் கொடுத்துள்ளார். இதே போல ராஜேந்திர பாலாஜி மீது 7 பேர் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் ரூ.78.70 லட்சம் வரை மோசடி நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரனின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அடுத்து குவியும் புகார்களால் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் மேலும் அதிகமாகியுள்ளது.