VOC Port Wind Turbine: தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகத்தில் சுமார் 77 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள காற்றாலை மூலமாக 6.25MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக..!

கடந்த பல தசாப்தங்களாகவே காற்றலை மூலம் மிகப்பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கும் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி சமதளப்பகுதியில் உள்ள நிலங்களில் கூட காற்றாலை பரவி கிடக்கிறது. தற்போது மாநிலத்தில் இத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாட்டிலே முதல்முறையாக கடலுக்குள் காற்றாலை அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் தெற்கு அலைத்தடுப்பிலிருந்து சுமார் 1,650 மீட்டர் தொலைவில் 6.25 மெகாவாட் திறன் கொண்ட ஒற்றை காற்றாலை ஒன்றை நிறுவ, நாட்டின் முதல் கடல் காற்றாலை மாதிரி திட்டம் தயாராகியுள்ளது.

கடலுக்குள் காற்றாலை மின்சாரம் - ரூ.77 கோடி பட்ஜெட்:

ரூ.77 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, இந்திய துறைமுக ரயில் மற்றும் கம்பிவடக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. இந்த ஒப்பந்தம் கடல் காற்றாலை விசிறியின் வடிவமைப்பு, கொள்முதல், கட்டுமானம், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பும் இதில் அடங்கும். உற்பத்தி செய்யப்படும் மினாரத்தை தரைக்கு கொண்டுவர, கடலுக்கு அடியில் கேபிள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் அடங்கிய, டெண்டருக்கான ஏற்பு கடிதம் வழங்கபட்ட 12 மாதங்களில் திட்டப் பணிகளை நிறைவு செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநில மின் கட்டமைப்புக்கு அனுப்பப்படும். கரையோரத்தில் நிறுவப்பட்டுள்ள ஆற்றல் அளவிகள், TANGEDCO/TANTRANSCO விதிமுறைகளின்படி, மின் கட்டமைப்புக்கு அனுப்பப்படும் மின்சாரம், மின் கட்டமைப்பிலிருந்து பெறப்படும் மின்சாரம் பதிவு செய்யப்படும்.

இதையும் படியுங்கள்: TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு

திட்டத்தின் நோக்கம் என்ன?

தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த முன்மாதிரி காற்றாலை திட்டமானது, காற்றாலை செயல்திறன், நிறுவுதல் மற்றும் கப்பல் தளவாடங்கள், துறைமுகம் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி அணிதிரட்டல், மற்றும் கடலில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுதல் ஆகியவற்றில் நடைமுறை அனுபவத்தை உருவாக்கும். பெரிய அளவில் கடல் காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவைப்படும் பொறியியல், கடல்சார் தளவாடங்கள், மின்கட்டமைப்பு இணைப்பு மற்றும் செயல்பாடுகள் போன்ற திறன்களில் அனுபவத்தை ஏற்படுத்துவதே இந்த மாதிரி (Proto-Type) நோக்கமாகும். இது இந்தியாவின் கடற்கரையோரம் எதிர்காலத்தில் அமையவிருக்கும் பெரிய அளவிலான கடல் காற்றாலைத் திட்டங்களுக்கு ஒரு அடித்தளத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

நாட்டின் முதல் கடலுக்குள் காற்றாலை மின்சார உற்பத்தி எனும் திட்டத்தை பரிசோதிக்க, தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டது ஏன்? என சிலருக்கு கேள்விகள் எழலாம். அதற்கு சாதகமான கடற்காற்று நிலைகளையும், நன்கு நிறுவப்பட்ட துறைமுகச் சூழலமைப்பு மற்றும் கடல்சார் தளவாட உள்கட்டமைப்பையும் ஒருங்கே கொண்டிருப்பதால், இத்திட்டமானது டர்பைனை மட்டுமல்லாமல், கடலில் இயந்திரங்களை நிறுவி இயக்குவதற்குத் தேவையான பரந்த சூழலமைப்பையும் சோதித்துப் பார்க்க தூத்துக்குடி துறைமுகம் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

இந்தியாவின் உற்பத்தி திறன்:

இந்தியா ஏற்கனவே கணிசமான காற்றாலை மின் உற்பத்தித் தளத்தைக் கொண்டுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, ஜூன் 30, 2026 நிலவரப்படி, நாட்டின் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறன் 57,443 மெகாவாட்டாக உள்ளது. 10,734 மெகாவாட்டிற்கும் அதிகமான உற்பத்தித் திறனுடன், தமிழ்நாடு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதனிடையே 2025-ஆம் ஆண்டில் கடல்சார் காற்றாலைத் திட்டங்களில் நிறுவப்பட்ட காற்றாலைகளின் சராசரித் திறன் 10.3 மெகாவாட்டாக இருந்தது என்று உலகளாவிய காற்றாலை ஆற்றல் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே, உள்நாட்டிலும் கடலுக்குள் காற்றாலை மையங்களை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Source: Read Full Article