தமிழ்நாட்டில் தொடர்ந்து பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய அர்னாப் புயல் காரணமாக இந்த மழைப்பொழிவு இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் இந்த மழைப்பொழிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

62 இடங்களில் மண் சரிவு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊட்டி - குன்னூர் வழித்தடத்தில் பர்லியாறு பகுதியில் பேருந்து மண்சரிவில் சிக்கிய சம்பவமே பலரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள தகவலின்படி, மாவட்டத்தின் பல பகுதிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 வீடுகள் மிக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. ஒரு வீடு முற்றிலும் சேதமடைநதுள்ளது. மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் கோபுரங்கள் சேதம்:

இரண்டு உயர் மின் அழுத்த கோபுரம், 9 குறைந்த மின் அழுத்த கோபுரங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. 28 மரங்கள் வேரோடு அறுந்து விழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 453.9 மிமீட்டர் மழைப்பொழிவு பெய்துள்ளது. சராசரியாக 14.64 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

பார்சன் பள்ளத்தாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவில் மழைப்பொழிந்துள்ளது. குந்தா தாலுகாவில் மேல்பவானியில் 38 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சனிக்கிழமை காலை வரை 19 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலே ஊட்டி செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிர ஆகிய இரு பாதைகள் மட்டுமே உள்ளது.

போக்குவரத்து பாதிப்பு:

இதில் மேட்டுப்பாளையம் - குன்னூர் வழித்தடம் மிக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி வழியாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்வதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மீட்பு பணிகளும், சேதமடைந்த சாலைகளை சரி செய்வதற்கான பணிகளும் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு:

பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், முட்டை, குடிநீர் ஆகியவற்றின் விநியோகம் தடையில்லாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Source: Read Full Article