TN Govt Personal Loan: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தனிநபர் கடன் பெறுவதற்கான விதிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு ஜாக்பாட்:

அரசு ஊழியர்களுக்கான தனிநபர் கடன் அளவை 20 லட்சத்திலிருந்து 35 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் கூடுதல் பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில பணியாளர் கூட்டுறவு வங்கிகளால், தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை பெறப்பட்டதைத் தொடர்ந்து, பணியாளர் கூட்டுறவு வங்கிகளின் தனிநபர் கடன் வரம்பை உயர்த்துதல், நகரக் கூட்டுறவு வங்கிகளை TANCUBFED கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்த்தல், வளர்ச்சி நிதி தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பணியாளர் கூட்டுறவு வங்கிகளின் தனிநபர் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் ஆகிய முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக, கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், TANCUBFED அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

ரூ.35 லட்சம் வரை தனிநபர் கடன்:

அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும், உபரி நி பயன்படுத்தி கடன் வைப்பு விகிதத்தை (CD Ratio) உயர்த்திடவும், பணியாளர் கூட்டுறவு வங்கிகளால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.35 லட்சமாக உயர்த்தி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விரிவாக்கப்பட்ட பலனை பெற கீழ்க்கண்ட கூடுதல் நிபந்தனைகள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்

அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:

அதிகபட்ச கடன் உச்சவரம்பு: ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் தொகையானது, அதிகபட்சம் ரூ.35 லட்சம் அல்லது உறுப்பினரின் மொத்த மாத ஊதியத்தின் 25 மடங்கு அதாவது இதில் எது குறைவோ, அந்த தொகைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பங்குத்தொகை வசூல்: உறுப்பினருக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5 சதவிகிதம் பங்குத்தொகையாக வசூலிக்க வேண்டும்.

நிகர ஊதியம் 25% இருக்க வேண்டும்: உறுப்பினரின் மொத்த ஊதியத்திலிருந்து கடன் தவணைகள் உள்ளிட்ட அனைத்து பிடித்தங்களையும் கழித்த பின்னர், அவருக்கு கிடைக்கும் நிகர ஊதியமானது, மொத்த ஊதியத்தில் 25 சதவிகிதத்திற்கும் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

துணைவிதி திருத்தம்: பணியாளர் கூட்டுறவு வங்கியின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, உரிய துணைவிதி திருத்தங்களை சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் பதிவு செய்த பின்னரே, உயர்த்தப்பட்ட உச்சவரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி, வங்கியின் உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரையிலான தனிநபர் கடன் வழங்குவதை, மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளர் கூட்டுறவு சங்கம் என்றால் என்ன?

பணியாளர் கூட்டுறவு வங்கிகள் என்பவை, ஒரே அலுவலகம், நிறுவனம், துறை அல்லது தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் தாங்களாகவே இணைந்து உருவாக்கப்படும் நிதி அமைப்புகள் ஆகும். இவை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றன. குறிப்பிட்ட நிறுவனத்தில் அல்லது துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக இருக்க முடியும். உறுப்பினர்களே தங்களுக்குள் ஒரு நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்து, வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றனர். உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பாகப் பிடித்துக் கொள்கின்றனர். அதிலிருந்து உறுப்பினர்களின் அவசரத் தேவை, கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் அல்லது வீடு கட்ட குறைவான வட்டியில் கடன் வழங்குகின்றனர். வணிக வங்கிகளைப் போல லாப நோக்கம் இல்லாமல், உறுப்பினர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும், சேமிப்புத் தொகைக்கு நல்ல வட்டி வழங்குவதும் இதன் நோக்கமாகும்

Source: Read Full Article