TN Govt On Farmers: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், விவசாய பயிர்களை காக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

தீவிரமடையும் பருவமழை - அரசு ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், விவசாய பயிர்களை காக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதையொட்டி வேளாண்மை சார்ந்த முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளை ஆய்வு செய்திட, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில் வேளாண்மை இயக்குநரகத்தில் காணொலி வாயிலாக 23.10.2026 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்மை இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட வேளாண்மை / தோட்டக்கலை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் வட்டார அளவிலான அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:

கூட்டத்தின் முடிவில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, கிராம அளவில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:

உழவர் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வானிலை சார்ந்த பயிர் ஆலோசனைகள், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் களஅலுவலர்கள் மூலம் இச்சேவையை பரவலாக்கம் செய்ய வேண்டும்

வடகிழக்கு பருவமழை காலத்தில் அசாதாரண வானிலை சூழலால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை குறைத்திட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் (TNAU) தயாரிக்கப்பட்ட, மாவட்ட அளவிலான இடையேற்பாட்டுத் திட்டத்தை (Contingency plan) பின்பற்றி தகுந்த மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான இடுபொருட்களான தரமான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருத்துகள் போதுமான அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்

மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கண்காணிப்பு குழுக்கள், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பயிர்ச் சேதம் குறித்த விவரங்களை சேகரித்து அரசுக்கு தினசரி தெரிவிக்க வேண்டும்

கனமழையால் வயலில் நீர் சூழும் பட்சத்தில் விவசாய நிலங்களிலிருந்து உபரி நீரை வெளியேற்ற அனைத்து களப்பணியாளர்களும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மழைக்காலத்தில் ஏற்படும் பூச்சி நோய் தாக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தொடர்ந்து கண்காணித்து பயிர்ச் சேதத்தை குறைத்திடும் வகையில் தகுந்த பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்

நடப்பு சம்பா பருவத்தில் ஏற்படும் எதிர்பாராத பயிர் இழப்புகளைச் சமாளிக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு (PMFBY) திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வேளாண்மை/தோட்டக்கலை துறையை சார்ந்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து, பருவமழைக் காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படாத வகையில் களப்பணியாற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article