தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை அப்டேட்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை தொடரும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தென்மேற்கு பருவமழை அடுத்த 10 நாட்களில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் விலகுகிறது. தமிழ்நாட்டில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலும், இயல்பிற்கு அதிக வெப்பமும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் முறிவின் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை தொடரும், இரண்டாவது வாரம் முதல் உள் மாவட்டங்களில் இரவு நேர மழையின் பரப்பளவு படிப்படியாக அதிகரிக்கும். காவிரி டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்காமல் தண்ணீர் வைக்க ஏற்ற சூழல் இருந்தால் தண்ணீரை வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை

குறிப்பாக அக்டோபர்15 வரை தான் மழைப்பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு அதனால் ஒரு தண்ணீர் வைத்து பயிரை வளர்த்தெடுக்க முயற்சியுங்கள். மேட்டூரில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் நீர் பெருக்கு கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா மட்டுமல்லாது அனைத்து மாவட்ட அனைத்து விவசாயிகளும் அக்டோபர் 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பயிர்களுக்கும், தென்னை போன்ற மரங்களுக்கும் ஒரு தண்ணீர் வைத்துவிடுங்கள். வறட்சியை போக்க வருகிறது வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15க்கு பின் நிலை கண்டிப்பாக மாறும் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article