உலக கிரிக்கெட்டில் தனக்கென தனி வரலாறு கொண்ட அணி இலங்கை. சமீபகாலமாக இலங்கை அணி பெரியளவில் எந்த ஐசிசி தொடரிலும் சோபிக்கவில்லை.

இங்கிலாந்து - பாகிஸ்தான்:

தற்போது இலங்கை அணி பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று ராவல்பிண்டியில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு டாம் பான்டன் - டக்கெட் நிதானமான தொடக்கம் அளித்தனர். டக்கெட் 39 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக, பான்டன் - ஜோ ரூட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. பான்டன் 50 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து ஹாரி ப்ரூக்- ரூட் ஜோடி சேர்ந்தனர்.

ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் சூப்பர்:

ஜோ ரூட் நிதானமாக ஆட ஹாரி ப்ரூக் அதிரடியாகவே ஆடினார். அவர் தொடக்கத்தில் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினாலும் களத்தில் நின்ற பிறகு பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசத் தொடங்கினார்.

🚨 HISTORY BY SRI LANKA IN RAWALPINDI. 🔥 - Sri Lanka chased down 430 runs against England in 49.5 overs. 🤯 - The second-highest chase in ODI history. Avishka Fernando - 97 (83). Pavan Rathnayake - 130 (106). Dasun Shanaka - 97 (50). Janith Liyanage - 61* (27). #SLvsENG #Cricket https://t.co/cTPw0HZYYj

— Vedant vivek (@vedant_vivek_15) October 22, 2026

மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஜோ ரூட் 66 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து, ஹாரி ப்ரூக் - வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பட்டாசாய் வெடிக்கத் தொடங்கினர். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் இருவரும் விளாச இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினார்.

ப்ரூக் இரட்டை சதம்:

சதம் விளாசிய ஹாரி ப்ரூக் அதன்பின்பு ஆட்டத்தில் அனல் ஏற்றினார். மதுஷங்கா, ஈஷன் மலிங்கா, சனகா, லியாங்கே ஆகியோரது பந்துவீச்சில் சிக்ஸரும், பவுண்டரியும் பறந்து கொண்டு இருந்தது. சிக்ஸர் மழையைப் பொழிந்த ஹாரி ப்ரூக் இரட்டை சதம் விளாசி புதிய வரலாறு படைத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் விளாசியது. ஹாரி ப்ரூக் 116 பந்துகளில் 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் 202 ரன்கள் எடுத்தார். ஜேக்ஸ் 30 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்தார்.

430 ரன்கள் டார்கெட்:

430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், தொடக்கமும் அப்படியே அமைந்தது. தொடக்க வீரர் மென்டிஸ் 18 ரன்களில் அவுட்டாக, கேப்டன் குசல் மென்டிஸ் எந்த பந்தையும் சந்திக்காமலே ரன் அவுட்டாகினார்.

24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலை இருந்தபோது ஃபெர்னான்டோ - பவன் ரத்நாயகே ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடினார். தொடக்கத்தில் களத்தில் நங்கூரமிட்ட இவர்கள் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். அவ்வப்போது சிக்ஸரும் விளாசி இலங்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினர்.

ஆட்டத்தில் அனல் ஏற்றிய சனகா:

சிறப்பாக ஆடிய பெர்னாண்டோ சதத்தை நெருங்கிய நிலையில் அவுட்டானார். 83 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து அவர் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 27 ஓவர்களில் 190 ரன்களுடன் இருந்த இலங்கையை இதன்பின்பு சுருட்டிவிடலாம் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கருதினர். ஆனால், இதன்பின்புதான் ஆட்டமே அனல் பறக்கத் தொடங்கியது.

இனி அதிரடியை கையில் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த இலங்கை வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். முன்னாள் கேப்டன் தசுன் சனகா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசத் தொடங்கினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய பவன் ரத்நாயகே சதம் விளாசினார். இதனால், இலங்கை ஸ்கோர் மளமளவென எகிறியது.

பவன் ரத்நாயகே சதம்:

சிறப்பாக ஆடிய பவன் ரத்நாயகே 106 பந்துகளில் 15 பவுண்டரி 3 சிக்ஸருடன் 130 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஜனித் லியாங்கே ருத்ரதாண்டவம் ஆடினார். டி20 போல அவர் பேட்டிங் செய்தார். பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் செல்ல இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திகைத்துப் போனார்கள்.

சிறப்பாக ஆடிய சனகா சதத்தை நெருங்கிய நிலையில் அவுட்டானார். அவர் 50 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து அவுட்டானார். 40.2 ஓவர்களில் 323 ரன்கள் இருந்த இலங்கை 44வது ஓவர் முடிவில் 363 ரன்கள் எடுத்திருந்தது. சனகா அவுட்டான பிறகு மொத்த பொறுப்பையும் ஜனித் லியாங்கே எடுத்துக்கொண்டார்.

த்ரில் வெற்றி:

பின்வரிசையில் வந்த சஹான் 13 ரன்னில் அவுட்டாக, அடுத்தடுத்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள். கடைசி ஓவரில் ஜோஷ் டங் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது லியாங்கே சிக்ஸர் விளாசி இலங்கையை வெற்றிபெற வைத்தார். இதனால், இலங்கை அணி 49.5 ஓவர்களில் 430 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த 2வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா நிர்ணயித்த 434 ரன்களை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா 438 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சேசிங் ஆகும். சாம் கரன் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 103 ரன்களை வாரி வழங்கினார்.

Source: Read Full Article