தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இன்று மூன்று மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் கனமழை

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நேற்று இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. கொடைக்கானல் செல்லும் பாதையில் ராட்சதப் பாறைகளுடன் மண் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொடைக்கானல் மலைப்பாதையில் இரவு நேரப் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக, கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்றிரவு பழனி வழியாக வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகள்

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு பிறகு சூழல் ஆய்வு செய்யப்பட்டு, அடிவாரத்தில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பழனி - கொடைக்கானல் ரோட்டில் காவல்துறையினர் பேரிகார்டுகள் அமைத்து தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் அறிவுரை

அப்போது வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்; கொடைக்கானலில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் 2 நாட்களுக்கு முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அங்கு சுற்றிப் பார்ப்பதற்கு எதுவுமே திறக்கப்படவில்லை. நீங்கள் வந்ததற்காக உங்கள் சொந்த விருப்பத்திலும் திருப்திக்காகவும் செல்கிறீர்கள்; எனவே எங்கும் அனாவசியமாக நிற்காமல், பாதுகாப்பாகச் சென்று திரும்புங்கள் என தெரிவித்தனர்.

Source: Read Full Article