India USA Oil TRade: அமெரிக்க உள்துறை அமைச்சர் ரூபியோ 3 நாள் பயணமாக இந்தியா வந்து, பிரதமர் மோடியை சந்திக்காமல் சென்றது பெரும் அரசியல் சேதியாக கூறப்படுகிறது.

இந்தியா - ரஷ்யா கச்சா எண்ணெய் விவகாரம்:

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணேய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் நட்புற காரணமாக மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை வழங்குவதால், ட்ரம்பின் மிரட்டலையும் தாண்டி நாட்டு மக்களின் நலன் கருதி புதினுடன் வலுவான எரிபொருள் வியாபாரத்தை இந்தியா முன்னெடுத்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவக்கூடாது என்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான், அமெரிக்க உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அண்மையில் இந்தியா வந்து சென்ற பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்திக்காத ரூபியோ..!

பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், பிரதமர் மோடியை சந்திப்பது வழக்கம். ஆனால், மூன்று நாட்கள் நமது நாட்டில் இருந்தும் ரூபியோ பிரதமரை சந்திக்கவில்லை. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை கூட மும்பையில் தான் தங்கியிருந்த பகுதிக்கு வரவழைத்து தான் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் ரூபியோவின் இந்திய வருகைக்கான நோக்கம் என்ன? ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானியை மட்டும் சந்தித்து, அவரது குஜாராத் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு சென்றது ஏன்? பிரதமரை சந்திக்காதது ஏன்? என்பது தொடர்பான பல கேள்விகள் எழுந்துள்ளன.

எண்ணெயை டாலர்களாக மாற்ற அமெரிக்கா திட்டம்?

இதுதொடர்பாக வெளியாகியுள்ள டெல்லி வட்டார தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. வெனிசுலா முன்னாள் அதிபரை கைது செய்ததை தொடர்ந்து அந்நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய் அமெரிக்காவின் கருவூலத்தில் குவிந்து வருகிறது. அந்த கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ரிலையன்ஸின் குஜராத் சுத்திகரிப்பு ஆலையை தான் ரூபியோ பார்வையிட்டு சென்றுள்ளார். கடந்த மார்ச் தொடங்கி 3 மாதங்களில் மட்டும் அமெரிக்க டாலர் இல்லாமலேயே, 1.38 லட்சம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதனால் டாலர் தேவையும் குறைந்துள்ளது. இந்த நடைமுறையை உடைத்து, வெனிசுலா எண்ணெயை இந்தியா வாங்க அமெரிக்கா வலியுறுத்துகிறதாம், அப்படி நடந்தால் டாலரில் தான் வர்த்தகம் நடைபெறும், இதனால் டாலரின் தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகும். இதனால் தனது பரம எதிரியான ரஷ்யாவின் வருவாயும் சரியும் என அமெரிக்கா திட்டமிடுகிறதாம்.

இதையும் படியுங்கள்: Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி

ஹர்திப் சிங் பூரியை வைத்து மிரட்டும் அமெரிக்கா..!

வெனிசுலா கச்சா எண்ணெய் தொடர்பான ஆலோசனைகளை ரூபியோ இந்தியாவில் நிகழ்த்திக் கொண்டிருந்தபோதே, சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய எப்ஸ்டீன் உடன் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி இருந்த புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டது. அந்நாட்டின் நீதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் 2014ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோடியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான ஹர்திப்சிங்கை குறைவைத்து, பிரதமருக்கே அமெரிக்கா மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை வெனிசுலாவின் எண்ணெயை இந்தியா வாங்க மறுத்தால், அடுத்தடுத்து தீவிரமான தாக்குதலை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்த்தவே ரூபியோ இங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆவேசம்..!

முன்னதாக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் விளக்கிய ஹர்திப் சிங் பூரி, ”எப்ஸ்டீனை தனியாக சந்தித்தது கிடையாது. எங்களுக்கு இடையே இரண்டொரு மெயில் தொடர்புகள் மட்டுமே இருந்தன” என குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இவர்களுக்கு இடையே 62 மெயில் தொடர்புகள் இருந்ததாக அமெரிக்கா நீதித்துறை ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பிரதமர் மோடிக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கும் சூழலில், “ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்களே இவர்கள் எந்த தேசதுரோகியை மிரட்டி பணியவைக்கிறார்கள்” என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த வர்த்தக மிரட்டலை அரசு எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article