CM Vijay: காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி மக்களின் நம்பிக்கையை ஈர்க்கும் வகையிலேயே, முதலமைச்சர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பான்மையை எதிர்நோக்கி தவெக அரசு:

சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு விஜய் வென்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மட்டுமின்றி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 6 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், மாநிலத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அவற்றில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரே களம் கண்டு மீண்டும் வெற்றி பெற்றனர். இதேபோன்று காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலுல் வென்று, சட்டமன்றத்தில் 109 ஆக உள்ள தங்களது பலத்தை 114 ஆக உயர்த்த தவெக ஆர்வம் காட்டுகிறது.

இடைத்தேர்தல் வெற்றியில் தவெக வருத்தம்:

இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமானதாக அமைந்தாலும், அது ஆளுங்கட்சி எதிர்பார்த்த அளவிலான இமாலய வெற்றியாக அமையவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது என தவெக விரும்பியது. ஆனால், அதை களத்தில் செய்துகாட்ட முடியவில்லை. குறிப்பாக பொதுதேர்தலின் போது அதிமுக வென்ற இரண்டு தொகுதிகளிலும், இடைத்தேர்தலின் போது திமுக இரண்டாம் இடம் பிடித்து ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனை பனையூர் தரப்பு சற்றும் விரும்பவில்லையாம். அதன் காரணமாகவே விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் வலுவான பாடம் புகட்ட, அதிரடியான திட்டங்களை முன்னெடுத்துள்ளனராம்.

மதுராந்தகம், தாராபுரம் - அள்ளி வீசப்பட்ட திட்டங்கள்:

மதுராந்தகம் தொகுதியில் 5 கோடி ரூபாயில் தடுப்பணை, ரூ.4.5 கோடி செலவில் ஏரி மதகுகள் சீரமைக்கப்படும், ரூ.1.80 கோடி செலவில் 6 கொள்முதல் நிலையங்கள், அச்சரப்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கம், 4 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தாராபுரம் தொகுதிக்கு காவிரை நீரை ஆதாரமாக கொண்டு ஆயிரத்து 439 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டு குடிநீர் திட்டம், 2 ஆயிரத்து 700 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 கோடி ரூபாய் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள், 6 கோடி ரூபாயில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைப்பது தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை

5 தொகுதிகளுக்கான நம்பிக்கை

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான அதிரடி அறிவிப்புகள் என்பது, தங்களை நம்பி வாக்களிக்கும் மக்களை கைவிடமாட்டோம் என்பதற்கான உறுதிப்பாடே என்பதை தவெக வலியுறுத்த விரும்புகிறதாம். எதிர்வரும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் கோரிக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை இந்த அறிவிப்புகள் தெளிவுபடுத்தியுள்ளதாம். இதுபோக மக்களின் நம்பிக்கையை ஈட்ட, வடகிழக்கு பருவமழையை திறம்பட கையாளவும் அரசு முனைப்பு காட்டுகிறதாம். கூடுதலாக அண்ணன் சீர், வெற்றி 150 நாள் வேலைவாய்ப்பு போன்ற அடுத்தடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேறுறுவதிலும் அரசு கவனம் செலுத்துகிறதாம். வெறும் வெற்று வாக்குறுதிகளாக இல்லாமல், அவற்றை செயல்படுத்தி தங்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் எனபதில் தவெக அரசு உறுதியாக உள்ளதாம்.

Source: Read Full Article