Chennai Poonamallee Vadapalani Metro: பூந்தமல்லி தொடங்கி வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை:

சென்னை பெருநகரின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் இரண்டாம் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி தொடங்கி வடபழனி வரையிலான 14.64 கிலோ மீட்டர் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இது சென்னை முழுவதும் பயணிப்பதை எப்படி எளிதாக்குகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீலம் மற்றும் பச்ச வழித்தடங்களுடன் எப்படி இணைகிறது என்பது போன்ற விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாலை 4 முதல் பொதுமக்கள் அனுமதி

வடபழனி தொடங்கி பூந்தமல்லி வரையிலான வழித்தடம் மஞ்சள் வழியாக வகைப்படுத்தப்படுத்தட்டுள்ளது. இன்று பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட பிறகு மாலை 4 மணி முதல் பொதுமக்கள் இந்த வழித்தடத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை முதல் காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 17 ரயில் நிலையங்கள் இங்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பூந்தமல்லி தொடங்கி போரூர் வரையிலான ரயில் நிலைய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பணிகள் முழுமையடையாத போரூர் தொடங்கி வடபழனி வரையிலான பாதையில் உள்ள 6 நிலையங்களில் தற்போதைக்கு ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை, நீல வழித்தடங்களில் இணைவது எப்படி?

பூந்தமல்லியில் தொடங்கும் மஞ்சள் நிற வழித்தடமானது வடபழனி வரை நீண்டு, பச்சை மெட்ரோ வழித்தடத்தில் இணைகிறது. இந்த புள்ளியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் என இரண்டு மார்க்கங்களிலும் பச்சை வழித்தடத்தில் பயணிகள் பயணிக்கலாம். விமான நிலையத்தை நோக்கி செல்லும் போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், எதிர்திசையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பச்சை வழித்தடமானது நீல வழித்தடத்துடன் இணைகிறது. இப்படி சென்னையின் மூன்று முக்கிய மெட்ரோ வழித்தடங்களை இணைக்கும் புள்ளியாக இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னையை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை:

தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் மையப்பகுதியாக வடபழனி உருவெடுத்துள்ளது. இது புறநகர் பகுதியான பூந்தமல்லி மற்றும் போரூர் மட்டுமின்றி முக்கிய போக்குவரத்து மையங்களை அணுகுவதற்கான வாய்ப்பையும் மேம்படுத்துகிறது. கோயம்பேடு பேருந்து நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் என நகரின் பல முக்கிய போக்குவரத்து சந்திப்புகளை ஒரே கோட்டில் இணைக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சொகுசாக நகரின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு வசதியான பயணத்தின் மூலம் அடைவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்துள்ளது.

இதுபோக தொழில்துறை மையமாக உள்ள கிண்டி, நாள்தோறும் ஏராளமானோர் குவியும் சென்னை உயர்நீதிமன்றம், பிரபல தனியார் மருத்துவமனையான போரூர் ராமச்சந்திரா, வடசென்னையின் கடைசி புள்ளியான விம்கோ நகர் என சென்னை பெருநகரின் முக்கிய சந்திப்புகளை சாலை போக்குவரத்தை நம்பி இருக்காமல், மெட்ரோ மூலம் பொதுமக்கள் இனி எளிதில் சென்றடையலாம். இதுபோக வணிகம் சார்ந்த பல முக்கிய பகுதிகளும் இணைக்கப்படுவதால், நகருக்குள்ளான பயணம் என்பது மேலும் எளிதாகிறது.

கடைசி புள்ளி இணைப்புகள்:

மீனம்பாக்கத்தில் இருந்து இனி பூந்தமல்லிக்கு பேருந்து மற்றும் கார் சேவையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை

சென்னையின் மேற்கு திசையில் உள்ள புறநகர் பகுதியான பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளுக்கு உயர்நீதிமன்றம், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கூட மெட்ரோவிலேயே நேரடியாக பயணிக்கலாம்

உச்சபட்ச நேரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக குறைந்து வடபழனி தொடங்கி பூந்தமல்லி வரையிலான 15 கிலோ மிட்டரை வெறும் 30 நிமிடங்களில் கடக்கலாம்

மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஐயப்பன்தாங்கல், போரூர் மற்றும் ஆற்காடு சாலை வழித்தடங்களில் வாகன பயன்பாடு குறையும்

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன

3 பெட்டிகள் கொண்ட தொடர்வண்டித் தொகுப்புகள், ஒரு பயணத்தில் 900 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை

Source: Read Full Article