Chennai Airport T3 Terminal: சென்னை விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கான பணிகள் நடப்பாண்டு டிசம்பரிலேயே முடியும் என முன்பு மதிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தாமதமாகும் 3வது முனையம்:

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், சர்வதேச போக்குவரத்திற்கான T3 முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அண்மையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவில் வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணியின் ஒரு பகுதியான முனையத்தின் பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்பதை மதிப்பீடு செய்வதற்கும், விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் வழிகளை ஆராய்வதையும் முதன்மையான நோக்கமாக கொண்டு, இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ரூ.2,400 கோடி மதிப்பிலான பணிகள்:

சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் பட்ஜெட்டில், 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் ஒரு அங்கமான T3 முனையத்தின் கட்டுமான பணிகள் பல்வேறு காரணங்கள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கடைசியாக வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் 2027ம் ஆண்டு ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 86 ஆயிரத்து 135 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த முனையத்தின் கட்டுமான பணிகள் சுமார் 75 சதவிகிதம் வரை நிறைவடைந்துள்ளது. இந்த பணிகள் முழுமையாக நிறைவுற்று பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை விமான நிலையத்தின் ஓராண்டிற்கான பயணிகளை கையாளும் திறன் 3 கோடியே 50 லட்சமாக உயரும். தற்போது அந்த திறன் 3 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இனியும் தாமதமாகக் கூடாது என உத்தரவு..!

முனையத்தின் பணிகளை முடிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடாது என, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காலக்கெடுவைப் பின்பற்றுவதிலும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் இந்த விமான நிலையம் தனியார் விமான நிலையங்களைப் போல திறமையானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முனையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வழிகாட்டிப் பலகைகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாம். இதனிடையே, கடந்த சில வாரங்களில், விமான நிலையத்தில் கணிசமான வழிகாட்டிப் பலகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் உள்ள வழிகாட்டிப் பலகைகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இதையும் படியுங்கள்: LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?

பரிசீலனையில் ஐந்தாவது முனையம்:

இதனிடையே, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் T5 முனையம் கட்டுவது குறித்து தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் சின்ஹாவுக்கு விளக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, சென்னை விமான நிலையம் வழியாகப் பயணம் செய்த பிரதமர் அலுவலகச் செயலாளர்களில் ஒருவருக்கும், பரிசீலிக்கப்படும் திட்டங்கள், மேம்பாடுகள் மற்றும் வரவிருக்கும் முன்மொழிவுகள் குறித்து விளக்கப்பட்டதாம்.

Source: Read Full Article