மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என உயர்நீதிமன்றம் கூறிய கருத்தையையே உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் 42வது பொதுக்குழு கூட்டம் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட அனைத்து மஸ்ஜித்களின் நிர்வாகிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், திருவள்ளூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் உலமா பெருமக்கள் பொன்னேரி வட்டார ஜமாத் உலமா சபையின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான நவாஸ் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு இஸ்லாமிய சமூக மக்களுக்காக வழங்கி வரும் பல்வேறு திட்டங்களை குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படும், அந்த நிலங்களில் சமுதாயக் கூடங்கள் திருமணக்கூடங்கள் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் எனவும், மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என உயர்நீதிமன்றம் கூறிய கருத்தையையே உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதற்கு தீர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வருவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நீண்ட நாள் சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும், இல்லையேல், நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை காரணமாக 5 பேர் வெளியில் வந்திருக்கின்றனர், மீதமுள்ளவர்களும் படிப்படியாக விடுப்பில் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article