கூட்டு பயன்பாடு சொத்து - கூடுதல் விழிப்புணர்வு

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்து விற்பனை நடவடிக்கைகளில் தரகர்கள் இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற அளவுக்கு நிலைமை சென்று விட்டது. இதில் சொத்தின் உரிமையாளர் யார், அவர் தற்போது இருக்கிறாரா என்பது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம்.

சில இடங்களில் சொத்து உரிமையாளரிடம் பொது அதிகாரம் பெற்றதாக தரகர்கள் விலை பேசுவதை பார்க்க முடிகிறது. இது போன்ற சொத்துகளை நீங்கள் ஒரு முறை பார்த்து விட்டு வந்தவுடன் , தரகர்கள் பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுப்பது வழக்கமாக உள்ளது.

சொத்து விற்பனைக்கு வரும் போது அதில் கடைசி நிலையில் இருக்கும் பொது அதிகார முகவரை கடந்து , அதன் உண்மையான உரிமையாளர் யார் , அவர் தனி நபரா, கூட்டு குடும்ப உறுப்பினர்களா என்று பார்க்க வேண்டும். இதில் கூட்டு குடும்ப பயன்பாட்டில் உள்ள சொத்துகளை வாங்கும் போது மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா ?

பெரும்பாலான குடும்பங்களில் பொதுவான சொத்து இருக்கும். அதை அனைவருக்கும் பங்கிட முடியாது என்பதால் , யாராவது ஒருவருக்கு, ஒருமித்த கருத்து அடிப்படையில் கொடுப்பது வழக்கமாக உள்ளது. உதாரணமாக, ஒரு பெரிய வீடு உள்ளது, அதில் கூட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசித்து வருகின்றனர்.

அவர்கள் அந்த சொத்தை விற்க வேண்டும் என்று நினைத்தால், அனைவரும் பத்திரப் பதிவுக்கு வந்து விற்பனையை முடிப்பது சாத்தியமில்லை. எனவே , இத்தகைய சொத்து வாங்கும் போது , யாராவது ஒருவர் பெயருக்கு மற்றவர்கள் விடுதலை பத்திரம் கொடுத்தால் போதும்.

அவர் சட்டப் பூர்வமாக நேரில் ஆஜராகி சொத்து விற்பனை முடிக்க வாய்ப்பு ஏற்படும். இது போன்ற நிகழ்வுகளில் , சொத்து வாங்குவோர் , உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டியது சட்ட ரீதியாக அவசியமாகிறது.

விற்பனை நடவடிக்கை பாதிப்பு

சொத்தின் வாரிசுகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவினால், விற்பனை நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சில இடங்களில் வாரிசுகளில் யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூட்டு குடும்ப பயன்பாட்டில் உள்ள சொத்தை வாங்கும் போது, அனைவரும் ஒரே பகுதியில் வசிக்கின்றனரா அல்லது யாராவது சிலர் வெளி நாடுகளில் இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த சொத்து அவர்களுக்கு எப்போது, என்ன வழியில் கிடைத்தது என்று பார்க்க வேண்டும் என்கின்றனர் பதிவுத் துறை அதிகாரிகள்.

சொத்தின் வாரிசுகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவினால், யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தால், விற்பனை நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Source: Read Full Article