முதல்வர் விஜய், மழை நீரை அகற்றுவதில் சூப்பர் ஸ்டாராக பணியாற்றி இருக்கிறார் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் பாராட்டியுள்ளார்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன், எந்தக் கட்சியாக இருந்தாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மற்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு அனைவரும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் என்கிற குட்டி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை

சென்னையில் இரவு பெய்த மழைநீர், காலையில் எங்கும் தேங்காத வகையில் அகற்றப்பட்டுள்ளதாகவும், மழைநீர் தேங்காமல் தூய்மைப்படுத்தப்பட்ட விதம் பொதுமக்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக அளவில் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சில இடங்களிலும் உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மழைநீர் தேங்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும், முதலமைச்சர் இப்பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்

மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு தங்களது பேச்சு சரியானதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி பேசும்போது தங்களது வீட்டில் உள்ள தாய், தந்தை மற்றும் பெண்களிடம் இதுபோன்று பேசுவது சரியா என்று கேட்டுப் பார்த்துவிட்டுப் பேச வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். எந்தக் கட்சியாக இருந்தாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அனைவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் பண்பு பாராட்டுக்குரியது

சட்டப்பேரவையில் முதலமைச்சர் கண்ணியத்துடன் நடந்துகொண்டதை அனைவரும் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியபோது, தனது சார்பில் மன்னிப்புக் கேட்டதாக முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்தார். முதலமைச்சரின் இந்தப் பண்பு பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

Source: Read Full Article