ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திரா சென்ற முதல்வர் விஜய்

கிருஷ்ணா நீர் மற்றும் நதி நீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திராவிற்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், தலைமை செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோரும் தனி விமானம் மூலம் சென்றனர்.

அம்மன் கோயிலில் தரிசனம்

ஆந்திரா சென்ற முதலமைச்சர் விஜய் முதலாவதாக விஜயவாடாவில் அமைந்துள்ள கனக துர்கா அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண மரியாதை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆந்திர மக்கள் அவருக்கு அளித்த ஆரவராத்தை கண்டபோது ஒருநிமிடம் இது ஆந்திராவா அல்லது தமிழ்நாடா என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்தது.

சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

கனக துர்கா அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அமராவதியில் உள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டு சென்றார். அங்கு சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். பின்னர், தனது அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய்க்கு சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.

முதலமைச்சர்கள் பேசியது என்ன?

முதலமைச்சர் விஜய் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் களத்தில் மிகவும் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு உள்ளிட்டவை குறித்து இருமாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர்கள் சந்திப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பின்னர், விஜயவாடா உத்சம் 2.0 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் விஜய், முதல்வர் சந்திரபாபு நாயுடுடன் இணைந்து விழாவை கண்டுகளித்தார்.

#WATCH | Amaravati: Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu met Tamil Nadu Chief Minister Joseph Vijay at the Chief Minister’s Camp Office in Amaravati. During the meeting, CM Chandrababu Naidu introduced Ministers Narayana and Nimmala Ramanaidu, along with MP Magunta Srinivasulu Reddy, to Tamil Nadu CM Vijay. (Source: Andhra Pradesh I&PR)

— ANI (@ANI) October 13, 2026

முதல் முறை

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றபின் பிற மாநில முதலமைச்சரை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை. சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துள்ளார்.

Source: Read Full Article