“திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” என்று லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

அன்பில் மகேஸ்க்கு மருத்துவப்பரிசோதனை

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை நிறைவடைந்து வெளியே வந்த அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் பதிவான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் ஏற்கெனவே நடந்த விசாரணையின்போது முழு ஒத்துழைப்பை கொடுத்ததாகவும் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை என்றும் கூறினார்.

மருத்துவப் பரிசோதனை நிறைவடைந்த பின்னர் அன்பில் மகேஸ், மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவார். மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கைதான பின்னணி?

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கடந்த ஜூன் மாதம் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பி.டி.அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய இந்த சோதனையில் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அன்பில் மகேஸ் உறவினர் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அன்பில் மகேஸ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

முன்ஜாமீன் தள்ளுபடி

இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் கைது

இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கும் என்று திமுகவினர் இடையே நிலவி வருகிறது.

2021 முதல் 26 வரை திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். இவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

Source: Read Full Article