விழுப்புரம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என மயிலம் எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் வேதனை; முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது, காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று காணாமல் போன சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசாரிடமும் விசாரணை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிறுமி காணாமல் போய் 5 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக போலீசார் 4 முதல் 5 தனிப்படைகளை அமைத்து டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தீவிரமாக தேடி வருகின்றனர். சுற்றியுள்ள மலைப்பகுதிகள், கிராமங்களில் டிரோன் கேமராக்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின் பேரில் குடும்பத்தினர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

பொதுவாக பொதுவெளியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை மாறி, தற்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்ச உணர்வை அரசு உடனடியாக போக்க வேண்டும்.

போலீசார் தங்கள் பணியை செய்து வந்தாலும் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசும், காவல்துறையும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் தலைமைச் செயலக அளவில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கூடுதல் தனிப்படைகளை அமைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சிறுமியை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை. எனவே முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article