தமிழகத்தில் ஆட்சியை பிடித்த விஜய்

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார் விஜய். இதனையடுத்து திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர்களின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் சூர்யா, தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது இதில் முதல் ஆளாக தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அரசியலில் களம் இறங்கும் தனுஷ்

தனுஷ் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், தனுஷின் அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தி, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் சமூக நலப் பணிகளை விரிவுபடுத்தி, அதனை அரசியல் களத்திற்கான அடித்தளமாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் தனுஷ்

இதன் தொடர்ச்சியாக, தனுஷ் ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. இதில் தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே புதிய கட்சியின் பெயர் தொடர்பாக சில பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக எழுச்சிக் கழகம்

அந்த வகையில் ”தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரை தனுஷ் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயர் தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட இருப்பதாகஅவரது ரசிகர் மன்றத்தின் சார்பாக கூறப்பட்டு வருகிறது. எனினும், தனுஷ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால், ரசிகர் மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனுஷ் உண்மையிலேயே அரசியலில் களமிறங்குகிறாரா? ரசிகர் மன்றம் அரசியல் அமைப்பாக மாறுமா? புதிய கட்சி தொடங்கப்படுமா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

Source: Read Full Article