"தனுஷ் அரசியல் வருகையை கண்டு த.வெ.க அஞ்சாது. தமிழகத்தில் இன்னும் 40 ஆண்டு காலம் தமிழகம் வெற்றிக்கழகம் ஆட்சிதான்" என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் 24 ஆவது குருபூஜை 119 ஆவது ஜெயந்தி விழா அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழக சட்டம், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜு, பொறுப்பு அமைச்சர் மதன் ராஜா, மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.

தேவர் குரு பூஜைக்கு முதல்வர் வருவாரா?

முன்னதாக முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் நிர்மல் குமார் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில், தேவர் குருபூஜைக்கு முதல்வர் விஜய் வருகை குறித்து தவறான செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே தேவர் குரு பூஜையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், முதல்வர் வருகை தந்தால் அதிக நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் முதல்வர் வருகை திட்டம் இருக்காது. முதல்வர் வருகை திட்டம் இதுவரை இல்லை.

சட்டவிரோத செயல்களை ஈடுபடும் நபர்கள் த.வெ.கவில் இணைவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், புதிதாக எங்களுக்கே தெரியாமல் சிலர் கட்சியின் பேனர் புகைப்படங்களை பயன்படுத்தி உள்ளனர். குற்றப் பின்புலம் கொண்ட நபர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது என தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அதுபோன்ற நபர்களுக்கு கட்சி பதவி கிடையாது. தொடர் மின்தடை ஓரிரு மாதங்களில் சரி செய்யப்படும். புதிய ஒப்பந்த ஊழியர்கள் மின்வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் மின்தடை பிரச்சனை சீராகும்.

தனுஷ் அரசியல் வருகை கண்டு அச்சமா?

நடிகர் தனுஷ் அரசியல் வருகை கண்டு த.வெ.க அஞ்சுவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த அன்பை பெற்றவர் முதல்வர் விஜய். அடுத்து 30-40 ஆண்டுக்கு தமிழக வெற்றி கழகம் ஆட்சிதான் இருக்கும். முதல்வராக விஜய் இருப்பார். இன்று திமுக மு.க ஸ்டாலினியோ, உதயநிதியோ நம்பி ஓட்டு கேட்க முடியாத அளவுக்கு ஆளாளுக்கு ஒரு எண்ணத்தில் இருக்கின்றனர். ஸ்டாலினையும் உதயநிதியும் நம்பாத நபர்கள் வெளியே சென்று வேறு கட்சியில் சேர சேகர்பாபு போன்றவர்கள் முடிவு செய்துள்ளனர். இதே நிலைமை தான் அதிமுகவிலும் இருக்கிறது. தேவர் குருபூஜைக்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வருகை குறித்து மாவட்ட நிர்வாகம் மேற்பாடுகளை செய்து வருகிறது என்று கூறினார்.

Source: Read Full Article