கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழி இடம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு திமுகவை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனை இதுவரை ஆண்ட அரசுகளும், தற்போது ஆளும் தவெக அரசும் உறுதியாக பின்பற்றி வருகிறது.இப்படியான நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களில் கரூர் அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு திமுக தனது கண்டனங்களை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து தவெக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.

உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்.

1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு” என கடுமையாக சாடியுள்ளது.

Source: Read Full Article