உலக புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து முருகன் அருளை பெறுகின்றனர்.

பழனி முருகன் கோவில்

அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். மேலும் பழனி முருகன் கோவிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம். இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் பழனி முருகன் கோவிலை அடையலாம். ஆனால் அதிகளவில் பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால் அதிகளவில் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படிங்க: ஒற்றை மனிதரின் பிடிவாதத்தால் சாய்ந்ததா அதிமுக கோட்டை? சொல்வது யார் தெரியுமா?

பராமரிப்பு பணி

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி கடந்த ஜூலை 20ம் தேதி ஆண்டு பராமரிப்பு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.

ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

பின்னர் செப்டம்பர் 22ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கம்பி வட ஊர்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பழுது நீக்கப்பட்ட பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை

இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், இன்று காலை சுமார் 11.00 மணியளவில் கம்பிவட ஊர்தியின் (Rope Car) கியர்பாக்ஸ் ஷாப்டில் (Gear Box Shaft) ஏற்பட்ட பழுது காரணமாக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.பழுதினைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுது நீக்கப் பணிகள் நிறைவடைந்ததும், ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article