சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஷ்யம் நிறுவனத்திற்கு இடம் தொடர்பாக எந்த திட்ட அனுமதியும் வழங்கவில்லை சிஎம்டிஏ விளக்கமளித்துள்ளது.

சென்னை வரலாற்றிலேயே மிகப்பெரிய நில ஒப்பந்தம்

பிரபல கட்டுமான நிறுவனம் பாஷ்யம் குரூப். இவர்கள் முக்கியமான நகரங்களில் பல அடுக்குமாடி கட்டடங்கள், குடியிருப்புகளை கட்டியுள்ளனர். கட்டியும் வருகின்றனர். இந்த நிறுவனம் சென்னை வரலாற்றிலேயே மிகப்பெரிய நில ஒப்பந்ததை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் 5.8 ஏக்கர் நிலப்பரப்பை சுமார் ரூ.1,212 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த இடம் பிரபல தனியார் வங்கியின் இடமாகும். இது சமீபத்திய சென்னை ரியல் எஸ்டேட் வரலாற்றிலேயே மிக அதிக மதிப்புள்ள நில பரிவர்த்தனையாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தில் என்னென்ன கட்ட திட்டம்?

இந்த இடத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த வணிக வளாகங்கள்/ஐடி அலுவலகங்களை அமைக்க பாஷ்யம் குரூப் திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கிளப்ஹவுஸ், நீச்சல் குளம் மற்றும் பல நவீன வசதிகள் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதா?

அண்மையில், இந்த திட்டத்திற்கு 27 மாடிகள் கட்ட விதிமுறைகளை மீறி அனுமதி (CMDA Approval) வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கமும் கொடுத்தார். பாஷ்யம் நிறுவனத்திடமிருந்து திட்ட அனுமதி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதே தவிர, விதிமுறைகளை மீறி எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் அமைச்சர் கூறினார்.

சிஎம்டிஏ கொடுத்த விளக்கம் என்ன?

பாஷ்யம் குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து சிஎம்டிஏ அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. அதில், ‘நுங்கம்பாக்கத்தில் பாஷ்யம் நிறுவனத்திற்கு விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. மேலும், அந்த நிறுவனத்தின் நுங்கம்பாக்கம் இடம் தொடர்பாக இதுவரை எந்த அனுமதியும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தினால் (CMDA) வழங்கப்படவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article