ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆவின் நிறுவனம் விளக்கம்

ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப சந்தைப்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள சுமார் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!

மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாக சாக்லேட் (Rs1) மற்றும் பால் ரஸ்க் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய பொருட்களுக்கும் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், நுகர்வோரின் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்பைப் பிரதிபலிக்கிறது.

தீபாவளிப் பண்டிகை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விற்பனை முகவர்களிடமிருந்து பெறப்படும் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடையின்றி விநியோகம்

எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆவின் நிறுவனம், தரமான பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ந்து தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப தடையின்றி விநியோகம் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article