"கணவன் - மனைவி சேர்ந்து மது அருந்தும் பழக்கம்"

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் அருகே உள்ள காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி ( வயது 38 ) இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர்.

இருவரும் தினக் கூலி அடிப்படையில் அங்குள்ள தறிப்பட்டறை ஒன்றில் நெசவாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நாகராஜும் ராஜேஸ்வரியும் ஒன்றாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் , நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை , கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்த ராஜேஸ்வரி , வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

"குடும்பத்தினருடன் சேர்ந்து அடக்கம்"

இதையடுத்து , மனைவி உயிரிழந்தது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க நாகராஜ் குடும்பத்தினருடன் இணைந்து ராஜேஸ்வரியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சித்தோடு போலீசார் , ராஜேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் , நாகராஜைக் கைது செய்து சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கிக் கொன்று விட்டு , சம்பவத்தை மறைக்க முயன்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ராஜேஸ்வரியைத் தாக்கியதில் நாகராஜுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது

Source: Read Full Article