ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையை அடைந்தார்.

15 வயதில் அறிமுகம்

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி மற்றும் அசத்தலான ஆட்டத்தால் மிகுந்த கவனத்தை பெற்றார். வெறும் 14 வயதில் உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அவர் பதம் பார்த்த போட்டிகள் ஏராளம். இதனால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைபவ் சூர்யவன்ஷி பிரபலமடைந்தார். தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். இதன்மூலம், குறைந்த வயதில் (15 வயது) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (16 வயது) நீண்டகால சாதனையை அவர் முறியடித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் அறிமுகம்

ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமையை அடைந்தார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடிய சூர்யவன்ஷி மொத்தமாக 53 ரன்களை குவித்தார்.

இறுதிப் போட்டி

நிஷின் நகரில் உள்ள கரோகா ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில், தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய சூர்யவன்ஷி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வரலாறு படைத்த சூர்யவன்ஷி

இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்ததன் மூலம், ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடரில் 10 மீட்டர் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. அப்போது அவருக்கு வயது 16. இந்த சாதனையை 8 வருடங்களுக்கு பிறகு வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

Source: Read Full Article