தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் எங்கள் மேல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கும் பயம் குறையவில்லை என அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ட்வீட்

சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜயும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மெட்ரோ திட்டத்திற்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்ட பதிவில், “இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், சுரங்கப்பாதை அடியில் பாதுகாப்புக்கு ஹெல்மெட் போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை” என யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். இது முதலமைச்சர் விஜயை தான் சொல்கிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்தது. இதற்கு தவெக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

தனித்து விடப்பட்டதால் இபிஎஸ் உளறுகிறார்

அக்கட்சி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “பதினைந்து படுதோல்விசாமி இன்று ஒரு பொறாமைப் புலம்பல் அறிக்கையை விட்டிருக்கிறார். ‘Tunnel அடியில் Safety Helmet போட்டு’ என்று கூறி உள்ளது எப்படி இருக்கிறது தெரியுமா?. தான் ஹெல்மெட் போடாமல் தடாலென தரையில் விழுந்து நீச்சல் அடித்துப் போய் முதலமைச்சர் பதவி பெற்றது குறித்து சொல்லி, தான் யாரென்ற உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததுபோலவே இருக்கிறது.

முதலமைச்சர் பதவியை யாரிடம் இருந்து பெற்றாரோ, அவரையே கட்சியை விட்டு நீக்கிய இவர்தான் ‘ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை' என்று தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இந்த விஷவாசியைப் பார்த்து மொத்த அரசியல் உலகமும் கைகளை மட்டுமல்ல கால்களையும் தட்டிச் சிரிக்கிறது.

தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தன் மூர்க்கத்தனத்தால் மூக்கை உடைத்துக்கொண்டதால், தன் கட்சித் தொண்டர்களாலேயே தனித்துவிடப்பட்டதைத் தாங்கமுடியாமல் தத்துபித்து என்று உளறி இருக்கிறார். தொடர்ந்து இப்படியே நம் வெற்றித் தலைவரைப் பற்றி கிண்டல் கேலியாக தீயசக்தி தி.மு.க. குரலிலேயே பேசிக்கொண்டிருந்தால் ‘உள்ளதும் போச்சுடா’ என்ற நிலைமைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடர்ப்பாடியைச் சுற்றி உள்ள மிகமிகச் சிலரும் ஏகத்துக்கும் கொதிக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.

வாண்டடா வண்டியில் ஏறுறீங்களே

இந்த பதிவை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ள அதிமுக, “யாரையும் சொல்லாமல் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, எங்களைத் தான் சொன்னார்கள் என்று வாண்டட் ஆக வண்டியில் ஏறி, எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரேஞ்சில் தங்கள் ரீல்ஸ் மோகத் தலைவரைக் காட்டிக் கொடுத்த இணைய தற்குறிகளே. 5 நிமிஷம் நின்னாலே கொத்து பரோட்டா என்று சொன்னவரை “முருங்கைக்காய்” பறிக்க வைத்த இயக்கமான அதிமுக, என்ன தான் தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும், உங்களுக்கு எங்கள் மீதான பயம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று இப்படி “காக்கா” போல கத்திக் கதறி நிரூபித்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article