"பட்டா மாறுதல் பணிகள் முடங்கும் நிலை"

தமிழகத்தில் வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் , அதற்கான பத்திரங்களை சார் – பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். அப்போது , சொத்தின் முந்தைய பத்திரப் பதிவுகள் குறித்து அறிய , வில்லங்க சான்றிதழ் பெறப்படுகிறது. இதில், பெரும்பாலும் சொத்து தொடர்பான 30 ஆண்டுகள் வரையிலான வில்லங்க சான்றிதழ் வாங்கினால் போதும்.

குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் மட்டும் , கூடுதல் ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் கேட்கப்படும். பட்டா பெயர் மாற்றத்துக்கான ஆய்வின் போது , 30 ஆண்டுகளாக பட்டா ரீதியாக எந்த மாற்றமும் இருப்பதில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த பத்திரப் பதிவு விபரங்களை ஆய்வு செய்யும் போது , பல்வேறு தவறுகள் தெரிய வருகின்றன. இதனால், பட்டா மாறுதல் பணிகள் பாதியில் முடங்கும் நிலை ஏற்படுகிறது. குறைந்த காலத்துக்கு வில்லங்க சான்றிதழ் வாங்குவதே , இப்பிரச்னைக்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து , நில நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

பொதுவாக சொத்து வாங்குவோர், 25 அல்லது 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் வாங்கினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால், அதற்கு முந்தைய காலகட்டத்தில் , பத்திரப் பதிவு தொடர்பாக குறைபாடு இருந்தால் , பட்டா மாறுதல் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் சொத்தின் உரிமை கூட கேள்விக் குறியாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, புதிதாக சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது , 50 அல்லது 60 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்களை இணைக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும் என, பதிவுத்துறைக்கு பரிந்துரைத்து இருக்கிறோம். தற்போதைய சூழலில் , 50 ஆண்டுகள் வரையிலான வில்லங்க சான்றிதழ்கள், ‘ஆன்லைன்’ முறையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் , இதை கடைப் பிடிப்பது சாத்தியமாகும் என இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article