"பழகிய பழக்கம் - நாளடைவில் மாறிய கள்ளக் காதல்"

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் ( வயது 26 ). இவர் காரைக்குடி - திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த வெண்ணிலா ( வயது 28 ) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. சின்னராஜ் மீது ஏற்கனவே கஞ்சா தொடர்பான சில வழக்குகள் உள்ளது.

இந்த வழக்கில் ராமநாதபுரம் சிறையில் இருந்த போது , மண்டபம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நம்பு முனீஸ்வரன் என்பவருடன் சின்னராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு , நம்பு முனீஸ்வரனைச் சின்னராஜ் அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வெண்ணிலாவுக்கும் நம்பு முனீஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியுள்ளது.

"நெடுஞ்சாலையில் அரிவாள் வெட்டு"

இதையடுத்து , சின்னராஜை விட்டுப் பிரிந்த வெண்ணிலா , நம்பு முனீஸ்வரனுடன் சென்றுள்ளார். பின்னர் இருவரும் தேவகோட்டை அம்மாச்சி ஊரணி பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இதனால் சின்னராஜ், நம்பு முனீஸ்வரன் மற்றும் வெண்ணிலா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் , காரைக்குடிக்கு வந்த நம்பு முனீஸ்வரன், வெண்ணிலாவின் சித்தி மகனான தேவகோட்டை நந்தவனம் புதுத்தெருவைச் சேர்ந்த 22 வயதுடைய ராமசாமி என்பவருடன் சேர்ந்து சின்னராஜைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காரைக்குடி - திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வைத்து சின்னராஜை இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் , உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றக்குடி போலீசார், படுகாயமடைந்த சின்னராஜை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் , மேல் சிகிச்சைக்காக சிவகங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது , வழியிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து , சின்னராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற நம்பு முனீஸ்வரன் மற்றும் ராமசாமி ஆகிய இருவரையும் குன்றக்குடி போலீசார் சம்பவம் நடந்த 30 நிமிடங்களுக்குள் கைது செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article