நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசும்போது, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் குறித்து பேசினார். அது சட்டப்பேரவையில் திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை ஆவணத்தையும் சட்டப்பேரவையிலேயே படித்துக்காட்டி திமுகவிற்கு பதிலடி கொடுத்திருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மறுத்து பேசியிருந்தனர்.

அடுத்தடுத்து நடக்கவுள்ள ரெய்டுகள்

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு இல்லம் உள்ளிட்ட இடங்களில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி, கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது கடந்த ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, சக்கரபாணி, மூர்த்தி, முத்துசாமி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களிலும், முதல்வர் விஜய் வெளிநாடு சென்ற பின்னர் ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர். சோதனை மூலம் கைப்பற்றப்படும் ஆவணங்களை தொகுத்து முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

விசாரணை கமிஷன் முடிவில் விஜய்

இதனையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர் விஜய், தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அவர் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய பின்னர் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய ஆவணங்களுக்கு பதில் புதிய ஆதாரங்கள் – விஜய் மாஸ்டர் பிளான்

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மத்திய காங்கிரஸ் சர்க்கார் அமைத்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை குறித்து இன்று வரையில் பேசப்பட்டு வருகிறது. 2 ஜி வழக்கு உச்சம் பெற்றபோது, அந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டு கொஞ்ச நாட்களுக்கு சர்க்காரியா கமிஷன் பெயருக்கு ஓய்வு அளித்திருந்தனர். ஆனால், அந்த 2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை பெற்றுவிட்ட நிலையில், மீண்டும் திமுக மீது குற்றம் சுமத்துவதற்கு சர்க்காரியா கமிஷனையே தூக்கிக்கொண்டு வரவேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஆண்டாண்டு காலமாக பேசி புளித்துப்போன சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டே முதல்வர் விஜயும் நேற்று சட்டமன்றத்தில் பேசினார்.

இந்நிலையில், தவெக ஆட்சிக்கு வந்திருக்கும் சூழலில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க ஒரு குழுவை நியமிக்க முதல்வர் விஜய் முடிவெடுத்திருக்கிறார். இனி சர்க்காரியாவிற்கு பதில் முதல்வர் விஜய் அமைக்கப்போகும் விசாரணை ஆணையத்தின் பெயர்தான் பிரபலமாக இருக்க வேண்டும் என்ற முடிவில் இப்படியான திட்டத்தை அவரது ஆலோசர்கள் முதல்வருக்கு தெரிவித்திருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய திட்டம் ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை கமிஷனை அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது மாதிரி, முதல்வர் விஜய் அமைக்கவிருக்கும் திமுகவிற்கு எதிரான விசாரணை கமிஷன் மூலம் முன்னாள் அமைச்சர்கள், துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி, திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கவும், லஞ்ச ஒழிப்புத்துறையோடு இணைந்து விசாரணை கமிஷனை செயல்பட வைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால், பல திமுக அமைச்சர்களுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article