தமிழ்நாட்டில் உள்ள 52 கோயில்களில் இன்று முதல் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனைப் பாதுகாக்க தனி பெட்டக வசதியும் செய்யப்பட்டுள்ளது.

செல்போனால் பக்தர்களுக்கு இடையூறு

தமிழ்நாடு முழுவதும் சிறிய முதல் பெரியது வரையான பல்வேறு வகையான கோயில்கள் செயல்படுகின்றன இந்த கோயில்களுக்கு தினம்தோறும் உள்ளூர் முதல் வெளியூர் வரையிலான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையே செல்போன்களின் வளர்ச்சி கோயில்களில் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழலை கெடுப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

கோயிலில் உள்ளே சத்தமாக செல்போன் பேசுவது தொடங்கி, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்ட கருவறையை அத்துமீறி புகைப்படம் எடுப்பது, அங்கு பணி செய்யும் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுடன் ஏற்படும் தகராறு படம் பிடிப்பது என பலவிதமான சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் கோயிலில் உள்ளே புகைப்படம், செல்ஃபி, ரீல்ஸ் போன்றவையும் பதிவு செய்யப்படுகிறது.

இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் நிலையில் அது மற்றவர்களின் மனதை புண்படுத்துவதோடு, உண்மை என்ன என்பதை தெரியும் முன்னரே கோயிலில் பணி செய்யும் ஊழியர்கள் மீது தவறான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

52 கோயில்களில் செல்போனுக்கு தடை

இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கும் பெட்டக வசதியில் தங்களது செல்போனை ரூபாய் 5 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயில்களிலும் பக்தர்களின் வருகைக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதியின் எண்ணிக்கை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் எந்தெந்த கோயில்களில் தடை?

சென்னையை பொருத்தவரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், வடபழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவெற்றியூர் வடிவுடையம்மன், குன்றத்தூர் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருவள்ளூர் வீரராகவர், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோயில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், சமயபுரம், திருவண்ணாமலை, சுசீந்திரம், ஸ்ரீரங்கம், மதுரை அழகர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கோவை கோனியம்மன் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், தென்காசி மாவட்டம் திருமலை குமாரசாமி கோயில் ஆகிய இடங்களில் இந்த செல்போன் தடையானது அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

இது தொடர்பாக பக்தர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலம் போன்ற முக்கிய நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகை தந்தால் அதற்கு ஏற்ப செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கோயிலுக்கு வருகை தருபவர்கள் தங்களது வீடுகள் அல்லது தங்கி இருக்கும் அறைகளிலும், கார்களிலும் செல்போனை வைத்து விட்டு வர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையும் மீறி கோயில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமல்லாது கோயில்களில் பணியாற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article