இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் ஸ்மிரிதி மந்தனா. இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

124 ரன்கள்:

இந்த தொடரில் இந்திய அணி நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக ஆடியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணிக்காக தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 57 பந்துகளில் சதம் விளாசினார். அவர் நேற்றைய போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிராக 64 பந்துகளில் 14 பவுண்டரி 7 சிக்ஸருடன் 124 ரன்கள் எடுத்தார்.

புதிய வரலாறு:

நேற்றைய போட்டியில் சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தன்வசம் வைத்திருந்தார்.

அந்த சாதனையை நேற்று ஸ்மிரிதி மந்தனா முறியடித்தார். மிதாலி ராஜ் 10 ஆயிரத்து 868 ரன்களுடன் சாதனை வகித்து வந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா நேற்றைய போட்டியில் எடுத்த 124 ரன்களால் சர்வதேச அளவில் அவரது மொத்த ரன்கள் 10 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. 30 வயதே ஆன ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ள இந்த மாபெரும் சாதனைக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அதிக சாதனை:

இந்த சாதனை மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். மெக் லேனிங் மற்றும் லாரா வோல்வர்ட் 17 சதங்களுடன் அதிக சதம் விளாசிய வீராங்கனை என்ற பட்டியலில் இருந்த நிலையில், ஸ்மிரிதி மந்தனா 18 சதங்கள் விளாசி அந்த சாதனையை முறியடித்தார். மேலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களிலும் இந்திய அணிக்காகவும், சர்வதேச அளவிலும் சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

இந்த சாதனை மட்டுமின்றி ஒரு அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற தனது சொந்த சாதனையையே ஸ்மிரிதி நேற்று முறியடித்தார். இதற்கு முன்பு, கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிராக 112 ரன்கள் அவர் எடுத்திருந்த நிலையில், நேற்று 124 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதிக சிக்ஸர்கள்:

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வீராங்கனை ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் ஸ்மிரிதி நேற்று படைத்தார். ஸ்மிரிதி மந்தனா தவிர இலங்கையின் சமரி அட்டப்பட்டு மட்டுமே மகளிர் ஆசிய கோப்பையில் சதம் விளாசிய வீராங்கனை ஆவார்.

இந்திய டி20 கிரிக்கெட் மகளிர் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீராங்கனை என்ற பட்டத்தையும் ஸ்மிரிதி மந்தனா தனதாக்கிக் கொண்டார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வசம் இருந்த இந்த சாதனையை ஹாங்காங் அணிக்கு எதிராக 7 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக 95 சிக்ஸர்கள் விளாசி தன் பக்கம் எடுத்துக்கொண்டார்.

சாதனைகள்:

டி20யில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். அவர் நேற்றைய பாேட்டியில் 7 சிக்ஸர்கள் விளாசி இந்த சாதனையை படைத்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் நியூசிலாந்துக்கு எதிராக 8 சிக்ஸர்கள் விளாசியதே தற்போது வரை அதிகபட்சம் ஆகும்.

ஸ்மிரிதி மந்தனா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 788 ரன்களும், 120 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 411 ரன்களும், 173 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 681 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 149 ரன்களும் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 136 ரன்களும், டி20யில் அதிகபட்சமாக 124 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களும், ஒருநாள் போட்டியில் 14 சதங்களும், டி20யில் 2 சதங்களும் விளாசியுள்ளார்.

Source: Read Full Article