இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வுகால நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது பிஎஃப். அதாவது EPFO அமைப்பின் மூலம் ஊழியர்கள் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பணம் ஒரு மொத்த தொகையாக அவர்கள் பணி ஓய்வு பெறும் போது கிடைக்கும், இத்துடன் ஓய்வூதியமும் உண்டு.

மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஈபிஎஃப்ஓ சம்பள வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கூடுதலாக 51 லட்சம் புதிய ஊழியர்கள் பிஎஃப் வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். தற்போதைய விதிகளின்படி, 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் (Basic Salary + DA) பெற்று வேலையில் சேரும் புதிய ஊழியர்கள், தானாகவே ஈபிஎஃப் அமைப்பின் கீழ் கட்டாயமாக இணைக்கப்படுவதில்லை. பிஎஃப் பணம் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை சம்பள வரம்பாக 15,000 ரூபாய் தான் உள்ளது. அதாவது 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் பிடித்தம் என்பது கட்டாயம். இந்த வரம்பு தற்போது 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை தந்துள்ளது.

எனவே இனி 15,000 முதல் 25,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் பெரும் பகுதியினர் இனி பிஎஃப் வரம்புக்குள் வருவார்கள். கூடுதலாக லட்சக்கணக்கானவர்கள் புதிதாக பிஎஃப் அமைப்பில் இணைய போகிறார்கள். இதன் மூலம் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சேமிப்புடன், பணியாளர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பலன்களும் இவர்களுக்கு கிடைக்கும். தற்போதைய கட்டமைப்புப்படி, சம்பளத்தில் 12% ஊழியரின் பங்களிப்பாகவும், அதற்கு இணையாக நிறுவனத்தின் பங்களிப்பாகவும் செலுத்தப்படுகிறது. 15,000 ரூபாய் வரம்பின்படி குறைந்தபட்ச கட்டாய ஊழியர் பங்களிப்பு மாதத்திற்கு 1,800 ரூபாயாக இருக்கிறது. ஆனால் புதிய வரம்பான 25,000 ரூபாய் அடிப்படையில் பார்க்கும்போது, 12% கணக்கீட்டின்படி ஊழியரின் கட்டாய பங்களிப்பு மாதத்திற்கு 3,000 ரூபாயாக உயரக்கூடும். அதாவது தற்போதுள்ளதை விட மாதத்திற்கு 1,200 ரூபாய் கூடுதலாக செலுத்த நேரிடலாம்.

மேலும், ஓய்வூதிய திட்டத்திற்கான நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்களிப்பும் புதிய வரம்பின்படி சுமார் 2,082.5 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பிஎஃப் பிடித்தம் உயர்கிறது என்றால் நமக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்கள் அதிகரிக்கும். இந்த முடிவினால் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 11,339 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது . தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு ஊழியரின் சராசரி மாத சம்பளம் தற்போது சுமார் 23,000 ரூபாயாக இருப்பதாக அரசு ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பல ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தான் ஊதிய வரம்பு மாற்றப்பட்டுள்ளது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இந்த முடிவை வரவேற்றாலும், இது மிகக் குறைவு மற்றும் மிக தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளன. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த வரம்பு குறைந்தது 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதனால் கையில் கிடைக்கும் சம்பளம் குறையக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளன. இந்த சம்பள வரம்பு உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளதால் நிறுவனங்கள் தங்களின் Payroll உள்ளிட்டவற்றில் இந்த மாற்றத்தை அமல்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளன.

Source: Read Full Article