தமிழ்நாட்டில் பெண்களைப் பற்றி அவதூறாக, ஆபாசமாக பேசினால் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான பதிலுரை மீது முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை பேசினார். பின்னர் சில விஷயங்களை சொல்ல விரும்புவதாக கூறினார்.

அதாவது, “கருத்துரிமை, பேச்சுரிமையை இதெல்லாம் எந்தளவுக்கு எல்லாரும் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக செய்யும் விமர்சனங்களில் எதை எடுக்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் அதே அரசியலுக்காக மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என்பது தான் எனது வேண்டுகோள். இது எல்லாருக்கும் பொதுவாக சொல்லிக் கொள்கிறேன்.

சமீபகாலமாக நம் தமிழ்நாட்டில் ஆபாசநதி, வன்ம நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பற்றி அவதூறு, இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெண்களை பேசும்முன் வீட்டில் இருக்கும் அம்மா, சகோதரி போன்ற பெண்களை மனதில் வைத்து பேச வேண்டும்.

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் சினிமாவில், இப்ப மக்கள் எனக்கு இடம் கொடுக்க பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது நம் வீட்டு பெண்கள் தான். அவர்களை அவதூறாக, மரியாதை இல்லாமல் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

அரசியல் காரணம் காழ்ப்புணர்ச்சியோடு நான் பேசவில்லை. அதற்கு நான் பொறுப்பில்லை. அந்த எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. கடந்த காலங்களில் நடந்த விஷயங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதே சட்டப்பேரவையில் ஜெயலலிதா திமுகவால் எவ்வளவு அவமானங்களை சந்தித்ததை எல்லாம் கேள்விப்பட்டுள்ளோம். அதெல்லாம் எதிர்காலத்தில் யாருக்கும் நடக்கக்கூடாது. அரசியல் ரீதியாக எந்த கடுமையான விமர்சனம் கூட வையுங்கள்.

சட்டசபைக்குள் எலும்பை உடைப்பேன் என திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசினார். இதுதான் அரசியலா?.. இப்படியெல்லாம் பேசி பேசி தான் திமுக எதிர்ப்பக்கமாக இருக்கிறார்கள். திமுகவில் இருக்கும் மூத்த உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாததால் நல்ல சாவே வராது என கூறுகிறார். இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு தானே மக்கள் ஓட்டு போட்டார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Source: Read Full Article