தவெகவிற்கு பல்டி அடித்த மதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த பிறகு தவெக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவெக கூட்டணியில் இணைந்தது. இதில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவும் தவெகவில் இணைந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது. இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்தது. அந்த வகையில் திமுக போட்ட பிச்சை தான் மதிமுக எம்.பி. பதவி என தெரிவித்ததிருந்தது. இதற்கு பதில் அளித்த மதிமுக எம்.பி.துரை வைகோ, மக்கள் எங்களுக்கு பிச்சை போட்டி வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் கொளத்தூர் மக்கள் திமுகவிற்கு பிச்சை போடவில்லையென கூறியிருந்தார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவுடன் திமுக கூட்டணியா.?

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கே.என்.நேரு கூறியதாவது, நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தி.மு.க. பா.ஜ.க.வுடன் மறைமுகக் கூட்டணியில் இருந்தது எனத் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை. சமூக நீதி, சனாதனம், முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நாங்கள் உடன்படவில்லை. தற்போது த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் மறைமுகமாக பா.ஜ.க.வுடன் உறவில் உள்ளனர் என்றார்.

”திமுகவில் இணைந்துவிடுகிறேன் என சொன்னவர் துரை வைகோ”

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவருக்கு மக்கள் பிச்சை போடவில்லை எனத் துரை வைகோ கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், துரை வைகோ பற்றி பேச விரும்பவில்லை. சின்னப் பிள்ளை ரொம்ப அதிகமாகப் பேசுகிறார். எங்க அப்பா கோபக்காரர்; கொஞ்ச நாள் பொறுங்கள், என்னால் கட்சி நடத்த முடியாது, நான் தி.மு.க.வுடன் வந்து விடுகிறேன் எனக் கூறியவர் தான் துரை வைகோ. அவர் எப்போது என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. எங்களுடைய வளர்ச்சி நின்று போய்விட்டதாகக் கூறுகிறார்; வெற்றிபெற்ற வேட்பாளர் எங்களுடன் வந்திருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா என்று தெரியவில்லை. அவர் கடுமையாகத்தான் பேசுகிறார்; அப்படிப் பேசுவது நியாயம் இல்லையென கே.என்.நேரு விமர்சித்தார்.

Source: Read Full Article