"ஓசியில் பீடி கேட்டு தொல்லை"

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி அபிஜித் ( வயது 54 ) இவர், சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி , அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை முடிந்து , அக்குடியிருப்பின் நுழைவு வாயிலில் நின்றபடி அபிஜித் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து, வடமாநிலத் தொழிலாளி அபிஜித்திடம் ஓசியில் பீடி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

"அடித்து கொலை செய்யப்பட்ட வடமாநில நபர்"

அந்த கும்பலுக்கு அபிஜித் ஓசியில் பீடி தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமான 4 பேரும் மது போதையில் வட மாநிலத் தொழிலாளி அபிஜித்தை உருட்டைக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். 4 பேர் கும்பலின் தாக்குதலில் படுகாயங்களுடன் அபிஜித் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை சக நண்பர்கள் மீட்டு , அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிஜித்தை பரிசோதித்த டாக்டர்கள் , அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மர்ம நபர்களின் தாக்குதலில் இறந்து போன அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஓசியில் பீடி தராத ஆத்திரத்தில் வடமாநிலத் தொழிலாளியை மதுபோதையில் சரமாரி தாக்கி கொலை செய்த நொளம்பூர், கஜலட்சுமி நகரை சேர்ந்த கோகுல் ( வயது 18 ), வசீகரன் ( வயது 20 ), சபரி ( வயது 19 ), அஜய் ( வயது 18 ) ஆகிய 4 பேரையும் கைது செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source: Read Full Article