சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு என வெளியாகியுள்ள செய்திகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

ஒப்பந்த காலம் முடிந்த சுங்கச்சாவடி

சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணம், சாலை அமைத்த செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகள் கூட இன்னும் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை ஒன்றிய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் அல்லவா?

பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு என்பது நேரடியாகவே பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மக்களிடம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் ஒன்றிய அரசு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது?

முற்றுகை போராட்டம்- வேல்முருகன் எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக் கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது? எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், ஒப்பந்தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

இக்கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்வதாக வேல்முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article