இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளுக்கு ஏற்றார்போல் அவ்வப்போது ரயில் நேரங்கள் மாற்றம் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம்.

இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் மற்றும் திருச்சி ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) செப். 10, 12 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்-மேட்டுப்பாளையம் இடையிலான சேவை அந்த 3 நாள்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) செப். 13ஆம் தேதி சேவையும், போத்தனூா்-மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் (16322), செப். 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் கோவை-பொள்ளாச்சி-திண்டுக்கல் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (16127), செப். 21, 26, 28, 30 மற்றும் அக். 3, 5, 7, 10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாக, நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சேவை மாற்றங்களைப் பயணிகள் கவனத்தில்கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Read Full Article