"மது போதைக்கு அடிமையான கணவன்"

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய விசாலாட்சி. இவர் மகளிர் சுயஉதவிக் குழு தலைவியாக இருந்து வந்தா நிலையில் இவரது முதல் கணவர் ஸ்ரீராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுடன் விசாலாட்சி பிழைப்பு தேடி சென்னை சென்றுள்ளார்.

அப்போது சமையல் வேலைக்குச் சென்ற போது, விழுப்புரம் மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த சமையல் மாஸ்டரான 42 வயதுடைய விஜயபாலன் என்பவருடன் விசாலாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் , இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு சரவணகுமார் ( வயது 15), ஹரிஹர சிவா ( வயது 11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

விஜயபாலன் மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. போதையில் வீட்டுக்கு வரும் அவர், மனைவி மற்றும் மகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

"வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை"

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பூர் வந்த விசாலாட்சி, தனது 2 மகன்கள் மற்றும் முதல் கணவருக்குப் பிறந்த 19 வயது மகளுடன் வீரமாருதி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த விஜயபாலன், தூங்கிக் கொண்டிருந்த தனது வளர்ப்பு மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் அலறியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த விசாலாட்சி , விஜயபாலனை தட்டிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த விஜயபாலன், அரிவாளால் விசாலாட்சியின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விசாலாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வளர்ப்பு தந்தையே தாயை கொலை செய்யததை நேரில் பார்த்த 19 வயது மகள் அதிர்ச்சியில் உறைந்து நிலையில் , சத்தம் போட்டால் அவரையும் கொலை செய்து விடுவதாக விஜயபாலன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளம்பெண் சாமர்த்தியமாக பாத்ரூம் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்போனை வாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்த விஜயபாலன் , தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் போலீசார், விசாலாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் , சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கியிருந்த விஜயபாலனை கைது செய்தனர். அவருடன் இருந்த 2 மகன்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Source: Read Full Article