மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆதரவுக் கேட்டு அதிமுக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தனர்.

எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா - தவெகவில் இணைவு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு தரப்பாக பிரிந்து ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பு எதிராகவும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு தெரிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இது மிகப்பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அதிமுக குற்றம் சாட்டியது. அதேசமயம் அதிமுக - திமுக இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விலகியதாக 6 பேரும் தெரிவித்தனர்.

<iframe title="CTR on Stalin MISA Arrest | ”மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை” பற்ற வைத்த CTR கொந்தளித்த தி.மு.கவினர்" src="https://www.youtube.com/embed/nDdDb_GmfVk" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இரு தொகுதிக்கு இடைத்தேர்தல்

இந்த நிலையில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் எனவும், அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், செப்டம்பர் 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தவெகவை வீழ்த்தி பாடம் புகட்ட வேண்டும் என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை திட்டம் தீட்டி வருகின்றன.

பாஜகவிடம் ஆதரவு கேட்ட அதிமுக

இந்த நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சக கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கேட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து கடிதம் வழங்கினார். அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கண்டிப்பாக 2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என கே.பி. முனுசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article