தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த பிரம்மாண்டமான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று 9ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெறும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது என புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் க.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. “வளர்ச்சி அடைந்த பாரதம்” (Viksit Bharat) என்ற தொலைநோக்கு பார்வையை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டங்கள், போதைப் பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அரசுத் துறைகளின் சிறப்பு அரங்குகள்:

பொதுமக்களுக்கு நேரடியாகச் சேவை வழங்கிடும் நோக்கில், இந்த விழிப்புணர்வு கண்காட்சியில் பல்வேறு முக்கிய அரசுத் துறைகளின் தனித்தனி சேவை அரங்குகள் (Stalls) அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS), மாவட்ட சமூக நல அலுவலகம், அஞ்சல் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) மற்றும் பொது சேவை மையம் (CSC) ஆகியவை பங்கேற்கின்றன.

ஒரே இடத்தில் கிடைக்கும் பல்வேறு இலவச சேவைகள்:

இந்த 3 நாள் முகாமில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடியாகப் பயனடையும் வகையில் பல்வேறு நேரடிப் பதிவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன:

அஞ்சல் துறை சேவை: அஞ்சல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் விவரங்களை புதுப்பிக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கான சேவைகள்: பொது சேவை மையம் வாயிலாக விவசாயிகளுக்கான தனித்துவ டிஜிட்டல் அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது. மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் இணைய பதிவு மேற்கொள்ளலாம். வேளாண் துறை சார்பில் மண் வள அட்டை, சொட்டுநீர் பாசன சலுகைகள், விதை மற்றும் உர மானியங்கள் மற்றும் தேசிய வேளாண் சந்தை (e-NAM) குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம்: ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டு அட்டை (ஆயுஷ்மான் பாரத்) பதிவு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதம் ரூ. 3,000 ஓய்வூதியத் திட்டப் பதிவுகள் உடனடியாகச் செய்து தரப்படுகின்றன.

இலவச தொழிற்பயிற்சி: ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பப் பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசுகள்

மூன்று நாட்களும் தினமும் காலை மற்றும் மதியம் என இரு அமர்வுகளாகச் சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறும். இதில் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு திட்டங்கள் குறித்த விளக்கங்களை வழங்கவுள்ளனர். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும், பேச்சாளர்கள் பேசிய கருத்துகளின் அடிப்படையில் மாணவர்களிடம் கேள்வி-பதில் (Quiz) நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்களுக்குத் தளத்திலேயே பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய மக்கள் தொடர்பகத்தின் தொழில்நுட்ப உதவி அலுவலர் க. ரவிந்திரன், கள விளம்பர உதவி அலுவலர்கள் ஜெ. போஸ்வெல் ஆசீர், சு. அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நலத்திட்ட உதவிகளைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article