"கிணற்றில் மிதந்த சிறுவர்கள் சடலம்"

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் , பெத்தூர் பகுதியில் , முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது கிணற்றை எட்டிப் பார்த்த போது , அதற்குள் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மின்மோட்டாரை நிறுத்திய அவர் , ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல் துறையினரும் , தீயணைப்புத் துறையினரும் கிணற்றுக்குள் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் , உயிரிழந்த சிறுவர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

"திருமணம் மீறிய உறவு"

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த 6 நாட்களாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஜமுனாமத்தூர், வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு - சிவகாமி தம்பதியின் மகன்களான 5 வயது பிரதாப் மற்றும் 2 வயது பிரேம்குமார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகளின் தாய் சிவகாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ராஜா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , இருவருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையின்படி, சிவகாமிக்கும் அவரது கணவர் சேட்டுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் , இதனால் இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சேட்டு செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த சிவகாமிக்கு , அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுடன் பழக்க ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், சிவகாமி மீண்டும் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் , அவர்களைப் பற்றி ராஜா கேள்வி எழுப்பியதாகவும், இதையடுத்து இருவரும் குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

"சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்"

சம்பவத்தன்று சிவகாமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆலங்காயம் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஆள் நடமாட்டம் குறைந்த விவசாயக் கிணற்றுக்கு குழந்தைகளை அழைத்து சென்று இருவரையும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாகவும் , பின்னர் ராஜாவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிவகாமி மற்றும் ராஜா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article