"காணாமல் போன சிறுமி"

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் , உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து , சிறுமியின் பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் , சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில் , வானக்காரதோப்பு பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான 25 வயதுடைய சுபாஷ் என்பவர் சிறுமியிடம் நீண்ட நாட்களாக பழகி வந்ததும் பின்னர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்ததும் தெரிய வந்தது.

"சிறுமியை அழைத்து சென்று திருமணம்"

அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய போது அவர் சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்றதாக தெரிய வந்தது. மேலும் , அவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சுபாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து , சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படும் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து சுபாஷை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை அழைத்து சென்று திருமணம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source: Read Full Article