மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவ நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் வசதிக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கே.எம்.எஸ். 2026-2027 குறுவை பருவத்தில் விவசாயிகள் தங்களின் நெல்லை எளிதான முறையில் தாமதமின்றி விற்பனை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய அனுமதி பெறப்பட்டு மொத்தம் 105 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்., தெரிவித்துள்ளார்.

இந்த கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் விவசாயிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இயக்கப்படும் என்றும் அவர் தனது செய்திக்குறிப்பில் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊக்கத்தொகையுடன் கூடிய புதிய நெல் விலைப் பட்டியல்

நடப்பு ஆண்டில் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய கொள்முதல் பருவத்தின் கீழ், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையுடன் மாநில அரசின் கூடுதல் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, சன்ன ரக நெல்லுக்கு (கிரேடு "ஏ") ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2461 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ. 289 சேர்த்து மொத்தம் ரூ. 2750 வழங்கப்படுகிறது. அதேபோல பொது ரக நெல்லுக்கு ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2441 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ. 159 சேர்த்து மொத்தம் ரூ. 2600 வீதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆன்லைன் பதிவு மற்றும் எளிய முறையில் நெல் விற்பனை செய்யும் நடைமுறைகள்

தற்போது பயன்பாட்டில் உள்ள ஆன்லைன் இணையதளத்தில் நடப்பு கொள்முதல் பருவத்திற்கான பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், அடையாள ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி கட்டணமின்றி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், விவசாயிகள் எந்த நாளில் எந்த நேரத்திற்கு நெல்லை எடுத்து வர வேண்டும் என்ற விவரம் அவர்களின் அலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

இந்த முன்னறிவிப்பு தகவலின் அடிப்படையில் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம்.

கண்டிப்பான நெறிமுறைகள், எடைக் கட்டுப்பாடு மற்றும் இடைத்தரகர்கள் மீதான நடவடிக்கை

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பதிவு செய்யும் முன்னுரிமை அடிப்படையிலேயே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கான கிரயத்தொகை 48 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் தங்களது ஒரு மூட்டை நெல்லின் எடை சாக்குடன் சேர்த்து சரியாக 40.580 கிலோ கிராம் உள்ளதா என்பதை நேரடி சரிபார்ப்பு செய்து கொள்வது அவசியமாகும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் எடையிட, தூற்ற மற்றும் தைக்க தேவையான கூலியை தமிழக அரசே ஏற்றுக்கொள்வதால், அங்கிருக்கும் பணியாளர்களோ அல்லது வேறு நபர்களோ ஏதேனும் பணம் கோரினால் உடனடியாக அறிவிப்பு பலகையில் உள்ள எண்களுக்கு புகார் அளிக்கலாம். வியாபாரிகளின் நெல் அல்லது வெளி மாவட்ட நெல் ஊடுருவுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களின் இயங்கும் நேரம் மற்றும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் செயல்படும். விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க முதுநிலை மண்டல மேலாளர் (9443471692), துணை மேலாளர் (9543469583), மாவட்ட புகார் எண் (9385324641) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் (18005993540) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புக்கு மாறாக காகித அளவில் மட்டுமே உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

மாவட்ட நிர்வாகம் 105 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், கள நிலவரம் அதற்கு மாறாக இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக வெளியான அறிவிப்புகள் வெறும் உத்தரவு வடிவத்திலேயே நீடிப்பதாகவும், நடைமுறையில் இன்னும் 50 நிலையங்கள் கூட முழுமையாக திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் மழையில் நனைந்து பாழாகி வருவதாகவும், அனைத்து கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து தடையின்றி நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article