Udhayanidhi Vs Minister Sarathkumar: போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விவாதத்தில் திமுக மீது அமைச்சர் சரத்குமார் சரமாரியாக குற்றம்சாட்டினார்.

போதைப்பொருள் தொடர்பான வாதம்:

கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெகவிற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் வெடித்தது. இதனால் இரண்டு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மனிதவள அமைச்சர் கிரிக்கெட் மைதானத்திலேயே போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய நிலையில், அப்போது ஆட்சியில் இருந்த திமுக தான் போதைப்பொருளை மைதான வளாகத்தில் விற்றதா? என சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரை கடுமையாக விமர்சித்த உதயநிதி..!

இதுதொடர்பான விவாதத்தில் பேசிய உதயநிதி, “அமைச்சரே ஐபிஎல் போட்டியில் பவுடரை நுணுக்கிக் கொண்டு இருந்தார். மாத்திரையை பொடியாக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? அவர் மீது ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சியினர் தொடர்ந்து போதைப்பொருள் வழக்கு விவகாரங்களில் சிக்கி வருவதாக குற்றம்சாட்ட, ஆதாரங்களின்றி பேசக்கூடாது என எச்சரித்தார். தொடர்ந்து, “அமைச்சர்கள் பேசியதற்கு ஏதேனும் ஆதாரம் கேட்டுள்ளீர்களா? எங்கள் ஆட்சியில் குற்றம் செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறோம். அமைச்சர் செய்ததை உலகமே பார்த்து இருக்கிறது. அதில் ஏதேனும் விசாரணை? அல்லது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? என கேட்க விரும்புகிறேன்” என உதயநிதி சாடினார்.

திமுக தான் போதைப்பொருளை விற்றதா?

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மனிதவள அமைச்சர் சரத்குமார், “மைதானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விளக்கமளித்துவிட்டேன். அதில் எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு முரண்பாடுகள் இருக்கலாம், கருத்துகள் இருக்கலாம். இப்படி பேசுகிறார்கள் என்றால், அந்த சம்பவத்தின் போது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. மைதான வாசலில் அவர்கள் தான் போதைப்பொருள் விற்றார்கள் என ஒப்புக்கொள்கிறார்களா? எனவே ஆதாரம் இல்லாமல் விளக்கம் கொடுத்த பிறகும் தேவையில்லாமல் பேசக்கூடாது.

கே.என். நேரு. ஆவேசம்..!

செய்திகளில் வருவதை எல்லாம் ஆதாரங்கள் இன்றி சொல்லக்கூடாது என சபாநாயகர் குறிப்பிடுகிறார். ஆனால் எனது துறையில் கிட்டத்தட்ட 888 கோடி ரூபாயை அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஊழல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து என்னாலும் பேச முடியும். எனவே, விளக்கம் கொடுத்த பிறகு தேவையில்லாமல் பேச வேண்டிய அவசியம் இல்லை” என அமைச்சர் சரத்குமார் பேசினார்.

இதையும் படியுங்கள்: CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்

இதற்கு உடனடியாக பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “அவரை பற்றி குற்றச்சாட்டு சொன்னால் அமைச்சர் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு சோதனையில் எங்கோ 888 கோடி ருபாய் விவகாரம் சிக்க, வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்ட விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதை இங்கு பேசுவது சரியாக இருக்குமா? அதற்கு நான் விளக்கம் சொல்ல முடியுமா? எனவே அதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும். உங்களை பற்றி சொன்னதற்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மற்றவரை பற்றி பேசாதீர்கள்” என கே.என். நேரு ஆவேசமடைந்தார்.

Source: Read Full Article