தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது,

கண்ணியம்:

சிறிது நேரத்திற்கு முன்பாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கண்ணியம் குறித்து எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார். உண்மையில் அதை முதன்முறையாக சட்டமன்றத்திற்கு வந்துள்ள நாங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆட்சேபனையும் எங்களுக்கு கிடையாது.

அதேசமயம், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றையும் குறிக்கோளாக கொண்டுள்ள முதலமைச்சரும் தனது கருத்தை இங்கே தெரிவித்துவிட்டார். அவருக்கு சட்டமன்றத்தில் முதன்முறையாக உறுப்பினராக இருக்கக்கூடிய நான் சிறிய வேண்டுகோள் வைக்கிறேன்.

உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்:

எப்படி கண்ணியம் குறித்து எங்களுக்கு சொன்னாரோ, அதேபோல தங்கள் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், 8 கோடி மக்களின் பிரதிநிதி முதலைமச்சர் அவைக்குள் வரும்போது அமர்ந்து இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த கண்ணியத்தை சொல்லிக் கொடுத்து 8 கோடி மக்களின் முதலமைச்சருக்கு மரியாதையை சொல்லித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தினசரி அவைக்கு வரும் முதலமைச்சர் விஜய் அவையில் உள்ள தவெக உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பல தருணங்களின் அவையின் இறுதிவரை சென்று உறுப்பினர்களுக்கு வணக்கம் செலுத்துகிறார். அவர்களும் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக எழுந்து நின்று பதிலுக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை தெரிவிக்கின்றனர்.

குவியும் கண்டனங்கள்:

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் எழுந்து நின்று மரியாதையின் வெளிப்பாடாக வணக்கம் சொல்கின்றனர். ஆனால், முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று வணக்கம் கூறினாலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இருக்கையிலே அமர்ந்து அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.

அவரது செயலுக்கு பலரும் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அமைச்சர் ரமேஷ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் ரமேஷின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பினர். பின்னர், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அவர்களை அமைதிப்படுத்தினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக - திமுக காரசார விவாதம் அரங்கேறி வருகிறது. தற்போது நடக்கும் மானியக்கோரிக்கையிலும் கடுமையான காரசார விவாதம் அரங்கேறி வருகிறது.

Source: Read Full Article