அரசு அலுவகங்களில் லஞ்சம்- கட்டுப்படுத்த திட்டம்

அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் தான் பணிகள் முடிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்து கொள்ளலாம் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை நேற்றைய தினம் கருத்து தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த நிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களிடம் கையிருப்பு ரொக்கத்தினை அலுவலகத்தில் பதிவு பதிவேட்டினை பராமரிக்க அறிவுறுத்தல் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கையிருப்பில் உள்ள ரொக்க பணம் எவ்வளவு.?

அதில், அரசுத்துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்க பணத்தை "Personal Cash Registerஇல் பதிவு செய்து அலுவலகத் தலைவரின் கையெழுத்து பெற்று எல்லா வேலை நாட்களிலும் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இப்பதிவேடானது தொடர் பராமரிப்பில் இல்லாமலும், இப்பதிவேடு பராமரிக்கப்படும். அலுவலங்களில் சரியாக முறைப்படுத்தப்படாமலே பெயரளவில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.இப்பதிவேட்டினை முறையாக பராமரிக்க வழிகாட்டு நெறிமுறைகள் கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்.?

1. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்க பணத்தை பதிவு செய்யும் விதமாக அனைத்து அலுவலகங்களிலும் பிரத்யேகமான Personal Cash Register" என்ற பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

2. இப்பதிவேடானது கண்டிப்பாக வருகைப்பதிவேட்டுடன் அலுவலகத் தலைவரின் ஒப்புதல் பெற்று சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

3. இப்பதிவேட்டினை அலுவலக தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை முறையாக ஆய்வு மேற்கொண்டு இப்பதிவேடு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

4. அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தங்கள் கையிருப்பு ரொக்கத்தினை எல்லா வேலை நாட்களிலும் வருகை பதிவேட்டோடு பராமரிக்கப்படும் Personal Cash Register"- இல் கண்டிப்பாக சரியான தொகையை பதிவு செய்ய வேண்டும்.

5. அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தேவைக்கு அதிகமான ரொக்கத்தினை கையிருப்பாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

6. இப்பதிவேட்டினை பராமரிக்காத அலுவலகத்தில் அதன் அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர், வருகை பதிவேடு பராமரிக்கும் பணியாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

7. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆய்வின் போது இப்பதிவேட்டினை கண்டிப்பாக அலுவலக தலைவர் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article